மூன்றாவது அலையில் சிக்கித்தவிக்கும் கிழக்கு !

பேலியகொடகொத்தணியில் பேதலித்துப்போயுள்ள கிழக்குமக்கள்.
கிழக்கில் கோரத்தாண்டவமாடும் பேலியகொட கொத்தணி!

இலங்கைத்திருநாட்டில்  ஏற்பட்ட கொரோனாவின் முதலிரு  அலைகளில் பொதுவாக மேற்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாவது அலையானது மேற்கிற்கு அப்பால் கிழக்கையும் ஆக்கிரமித்துள்ளது.

முதலாவது அலையில் கிழக்கில் மட்டக்களப்புநகரில் வெளிநாட்டிலிருந்துவந்த ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டு அவரும் குணமாகி அவரிடம் சென்றுவிட்டார்.


ஆனால் சமகாலத்தில் ஏறபட்டுள்ள மூன்றாவது அலையில் இதுவரை கிழக்கில் மாத்திரம் 28பேர் கொரோனாத்தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
அதாவது இதுவரை எவ்விதபிரச்சினையுமில்லாதிருந்த கிழக்கு இன்று ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது. பேலியகொட மீன்சந்தைக்குச்சென்றுதிரும்பிய 27 முஸ்லிம் மீன்வியாபாரிகளே இவ்விதம் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகளின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் கொரோனா!
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கொரோனாத்தொற்று என்பது வெளிநாட்டவர்கள் தொடர்பால்  சுற்றுலா வழிகாட்டியொருவருடாக  ஏற்பட்டது. அதனைமுதலாவது அலை என்றார்கள். பின்பு கந்தக்காடு போன்ற முகாம்களில் ஏற்பட்ட தொற்று. அது இரண்டாவது தொற்று. அதாவது இரண்டாவது அலை.

ஆனால் மூன்றாவது தொற்று ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண்ணின் மூலமாக ஆட்டத்தை ஆரம்பித்து மினுவாங்கொடை கொத்தணியாகி இன்று பேலியகொட கொததணியாகியுள்ளது.
அந்தப்பெண்ணின் தொற்றுக்கான மூலம் இன்னும் கண்டறியப்படாதது கவலைக்குரியது மட்டுமல்ல மிக ஆபத்தானதும் கூட. எனவேதான் மினுவாங்கொடை பேலியகொட என்று தொடர்ந்து இன்று கிழக்கில் கோரத்தாண்டவமாட ஆரம்பித்துள்ளது.


இன்று ஏற்பட்டிருப்பது கொத்தணிப்பரவலா? சமுகப்பரவலா? என்பதற்கு அப்பால் மிகவும் வீரியமிக்க வைரசாகவும் வேகமாக தொற்றும் கிருமியாகவும் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.இவ்வரைஸ் தொற்று ஏற்பட்டால் உடல்நிலைமோசமாக வலுவடைந்து உயிராபத்து ஏற்படுமளவிற்கு அதிகவேகத்தைக்கொண்டிருக்கிறது.
எனவே இது நாட்டு மக்களுக்கு ஆபத்து. வெகுவிரைவில் முழுநாடே முடக்கப்படலாம் என்ற எதிர்வுகூறல்களும் இல்லாமலில்லை.
ஏனென்றால் முதலாவது தொற்றின்போது சுமார் 6மாதங்களில் முழுநாட்டிலும் ஏற்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆக 3000மாத்திரமே. மெதுவான பரவல் எனலாம்.அதற்கு அரசாங்கமும் நாமும் எடுத்த சிரத்தை கவனம் என்பது அதீதம்.

ஆனால் இம்மூன்றாவது தொற்றின்போது கடந்த 20நாட்களில் நாட்களில் 4000பேருக்குமேல் தொற்றியுள்ளது. 16மாவட்டங்களில் அதன் தாக்கத்தை செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.

இம்முறை 3வது அலைக்கு எதிராக நிதானமான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உயர்தரப்பரீட்சையும் ஒரு காரணமெனக்கூறப்படுகின்றபோதிலும் தேவையான இடங்களில் ஊரடங்கு தனிமைப்படுத்தல்கள் போடப்பட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலுமில்லை. கொரோனாவுடன் வாழ்தல் என்ற புதியபோக்கிற்கமைய சவால்களை சமாளித்து முன்னேறுதல் என்ற பாங்கு காணப்படுகிறது.

இந்த மோசமான நிலைமையை கடந்துசெவ்லதற்கு நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சுய பாதுகாப்பில் அதீதகவனம்செலுத்தவேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டியது அவசியமாகும்.
கடந்தகாலத்தைப்போன்று அலட்சியமனப்பாங்கில் அசிரத்தையோடு செயற்பட்டால் அது நாட்டையும் மக்களையும் மிகமோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஜயமில்லை.
கிழக்கின் இன்றை யநிலை!
மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட் கொரோனா கொத்தனி தொற்றைத் தொடர்ந்து பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நாட்டின்  பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தி பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதைனையில் திருகோணமலையில் 6 பேரும் மட்டக்களப்பில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 10 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக  சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்துஇ இன்றில் இருந்து எந்து பொது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் இருந்து குறித்த மீன் சந்தைக்கு பாரியளவிலான மீன்கள் கொண்டு செல்வது வழக்கம் இவர்களை அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது .

இதில் திருகோணமலையில் 25 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அவ்வாறே மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி இ வாழைச்சேனை பிரதேசத்தில் 65 பேரை அடையாளம் கண்டு அதில் 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது 11 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டுபிடிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சுகாதார பிரிவிலுள்ள பொத்துவில் கல்முனை பகுதியில் 34 பேர் அடையாளம்காணப்பட்டு அவர்களில் அரைவாசிபேருக்கு பி.சி.ஆர் பிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதுடன் அம்பாறை பிராந்திய சுகாதார பிரிவில் திவிலப்பிட்டியாவில் விழா ஒன்றுக்கு சென்று திரும்பியவருக்கு பி.சி.ஆர் பிரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரை இதனின் தாக்கம் காணப்படுகின்றது. எங்களால் அறிந்தவற்றை நாடிச் சென்று செய்துள்ளோம் ஆகவே எங்களுக்கு அறியாமல் இன்னும் பல நபர்கள் தொற்றுடன் காணப்படலாம் ஆகவே கிழக்கு மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்களிடம் வேண்டுவது பேலிய கொடை மீன் சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் இருப்பின் அல்லது நீங்கள் அறிந்தளவில் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள சுகாதார வைத்திய பணிமனை அல்லது பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கவும். ஏன் என்றால் ஆரம்பத்திலே தொற்றுள்ளவர்களை அடையாளப்படுத்தி சிகிச்சையளிக்கும் இடத்தில் இந்த தொற்றுனுடைய வீரியத்தையும் பரவுகின்ற வீதத்தையும் மட்டுப்படுத்தலாம் ஆகவே இனிவரும் காலம் மிகவும் சவாலான காலங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்

இந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை சுகாதார திணைக்களத்தாலே முப்படைகளினாலேயே மட்டும் கட்டுப்படுத்தமுடியாது இது மக்கள் அனைவரும் ஊடகங்கள் உட்பட எல்லோரும் சேர்ந்து மிகவும் அவதானமாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த முடியும்.

எனவே பொதுமக்கள் சுகாதார அமைச்சால் அறிவித்த சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை பேணுதல் இ போன்றவற்றை கடைபிடிக்குமாறும் இன்றில் இருந்து எந்து பொது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற பெண்மணியின் சகோதரரான 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு மாலைதீவிலிருந்து வருகை தந்ததுடன் அவரை 2 வாரங்கள் வெலிகந்த வைத்தியசாலயில் தனிமைப்படுத்தி அதன்பிறகு பின்னர் மீண்டும் இரண்டு வாரங்கள் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருந்தார்.


இவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில் இவருக்கும் இவரது இரண்டு சகோதரிகளுக்கும் எம்மால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் இவருடைய சகோதரி ஒருவருக்கு பரிசோதனையின் போது கொரோனாவிற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சகோதரியின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருந்து நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையிலேயே இவருடைய சகோதரிக்கு  பரிசோதனையில்  நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் இது சில வேளைகளில் Post possitive ஆக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மூடப்பட்டுளளதுடன் அங்கு பகுதியளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமதாகவும் பொத்துவிலிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு போடபபட்டுள்;ளதாகவும் தெரிகிறது.

கல்முனையில்….
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட கல்முனையை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது  சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து   உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் திருமண வைபவங்கள் கூட்டங்கள் விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.


பொது நூலகங்கள் பூட்டப்படுவதுடன் கடற்கரை சிறுவர் பூங்காக்கள் மைதானங்கள் கடைத் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


அவசியமான தேவைகள் நிமித்தம் மாத்திரம் வெளியில் செல்வோர் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் சந்தை மற்றும் கடைகளுக்கு குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் செல்லுமாறும் தேவையின்றி எவரும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி பேணுதல் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கை கழுவும் வசதி செய்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் மீதும் பொது இடங்கள் மற்றும் கடைத்தெருக்களில் ஒன்றுகூடுவோர் மீதும் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை பொதுச் சந்தைக்கு செல்வோர் ரெஸ்ட் ஹவுஸ் பக்கமாக அமைந்துள்ள பிரதான வழியால் சென்று மைதான வீதி வழியால் வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் எனவும் வாகனத் தரிப்பிடமாக பிஸ்கால் வளாகம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் சேவையின்போது தரம்பிரிக்கப்பட்ட கழிவுகளை மாத்திரம் பொறுப்பேற்பது எனவும் மரக்குற்றிகள் மற்றும் பாரிய கழிவுப் பொருட்களை கையளிக்க வேண்டாம் எனவும் ஊழியர்கள் எவரும் வீடு வளவுகளுக்குள் பிரவேசிக்காமல் நுழைவாயில்களில் நின்றே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தலாவ வைத்தியசாலை ஆகியன கொவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

காரைதீவில்..
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்டபகுதிகளில் ஆழ்கடல் கரைவலைமீன்பிடி  மற்றும் அங்காடிக்கடைகளுக்கு எதிர்வரும் மூன்றுதினங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.


கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற அனைத்தும் இன்று தொடக்கம் 27ம் திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
பேலியகொட பொத்துவில் வாழைச்சேனை போன்ற இடங்களுக்குச்சென்றுவந்த மீனவர்கள் வியாபாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தமைக்கு அமைய மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே மேற்படி வைத்தியசாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மக்கள் சிந்தித்து சுய பாதுகாப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயம் எழுந்;துள்ளது. ஒருகட்டத்திற்கு மேல் அரசாங்கமோ சுகாதாரத்தணைக்களமோ கையறுநிலையிலிருக்கும். எனவே சுயபாதுகாப்பிலீடுபடுமாறும் அநாவசிமாக வீட்டைவிட்டு வெளியேறவேண்டாமெனவும் கேட்கப்பட்டுள்ளது.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்