மன்னாரில் இதுவரைக்கும் எட்டு நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)
அண்மையில் மன்னாரில் இனம் காணப்பட்ட ஒரு கொனோரா தொற்று நோயாளியைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (11.10.2020) மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரைக்கும் எட்டு நபர்கள் இவ்நோய்க்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. வினோதன் தெரிவித்தார்.
இது விடயமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் பட்டித் தோட்டம் என்ற பகுதியில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 07.10.2020 அன்று புதன் கிழமை மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைப்பெற சென்றிருந்த வேளையில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருடன் நேரடி தொடர்பு கொண்டவர்களை இனம் காணப்பட்டு 42 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவர்களின் முதல் 27 நபர்களின் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சனிக்கிழமை (10.10.2020) வெளியிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தனிமைப்பட்டிருந்த மிகுதி 15 நபர்களின் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பீடித்திருப்பது ஞாயிற்றுக் கிழமை (11.10.2020) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இதுவரைக்கும் எட்டு நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்

இவ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.