கொக்கட்டிச்சோலையில் உழவு இயந்திரம் புரண்டதில் இருவர் பலி, மூவர் காயம்

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி – கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் பயணித்த உழவு இயந்திரம் புரண்டதில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்த சம்பவம் இன்று(09) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச் சேர்ந்த 17வயதினையுடைய ஞானசேகரம் தினுஜன், 15வயதினையுடைய ஜெயச்சந்திரன் சஞ்சிதன் என இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும், அதே கிராமத்தினைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றைய நபர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மண்ணேற்றுவதற்காக சென்ற உழவு இயந்திரம், முச்சக்கரவண்டி ஒன்றினை முந்திச்செல்வதற்கு முயற்சித்தபோது, உழவு இயந்திரத்தின் பெட்டி புரண்டு, இயந்திரத்துடன் இழுபட்டுச் சென்றுள்ளது.

இவ்வியந்திரத்தின் பெட்டியில் இருந்த ஐவருமே விபத்துக்குள்ளாகியிருக்கின்றனர். இதேவேளை வாகனத்தினைச் செலுத்திச்சென்ற சாரதிக்கு எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமையுடன், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுகின்றன.

?
?