மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவிதமான கொவிட் 19 தொற்றும்; அடையாளப்படுத்தப்படவில்லை. மக்களுடைய அவதானம் கரிசனை பாராட்டப்படத்தக்கது

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன்
(கனகராசா சரவணன் )
கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கிருக்கின்ற அவதானம் பாராட்டத்தக்கது. வருகின்ற அனைவரும் நோயாளிகள் அல்ல. மனிதத்தன்மையை மதித்து பொறுப்புத்தன்மையுடன் இருக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அவர்களுக்குரிய அறிவுரைகளை வழங்கி எங்களுக்கு தகவல்களை விரைவாக வழங்குவீர்களாக இருந்தால், நிச்சயமாக உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்

கொரோனா தொற்றின் 2ஆவது அலை தொடர்பில்  செவ்வாய்க்கிழமை (06) மாலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள் பணிமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
குறிப்பிட்ட ஆடைத்தொழில் சாலையில் வேலை செய்கின்ற சிலர் எமது மாகாணத்தின் அம்பாரையைச் சேர்நதவர்கள். ஆகவே முதல் கட்டமாக குறிப்பிட்ட பெண் ஒருவர் 20ஆம் திகதி இறப்பு சம்பந்தமான ஒரு கூட்டத்துக்காக  கம்பஹாவில் இருந்து வந்து கிட்டத்தட்ட 20 -25 பேருடன் கலந்துரையாடி முச்சக்கரவண்டியில் ஏறி பொதுப் பேரூந்து ஊடாக கம்பஹா சென்றுள்ளார். சென்ற பிறகு கம்பஹாவில் பி.சிஆர்.பரிசோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாகப் பெறப்பட்ட தகவல்களின் படி அந்தப் பெண்ணுடன் பழகியவர்கள் என தெஹியத்தகண்டியவிலுள்ள சுகாதாரப்பிரிவனரின் உதவியுடன் 45 குடும்பங்கள் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டதன்படி பதியத்தலாவயில் இரண்டுபேர், மகோயாவில் ஒருவராக மேலும் மூவர் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் பல மாவட்டங்களைச் நேர்ந்த மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர் என்ற வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்த விடுமுறைக்காலத்தில் வீடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.
இந்த கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று நிலைமை காரணமாக கம்பஹா மாவட்டத்திலிருந்து, மாகாணத்துக்கு வருகை தருகின்றவர்களுக்கு அறிவுறுத்தி பி.சி.ஆர்.பரிசோதனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் வித்தியாசமானதொரு நிலைமை ஏற்பட்டிருந்தது, மட்டக்களப்பில் 16 பேரும் வந்தாறுமூலையில் 56 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவிதமான கொவிட் 19 தொற்றும்; அடையாளப்படுத்தப்படவில்லை. மக்களுடைய அவதானம் கரிசனை பாராட்டப்படத்தக்கது. அதே நேரத்தில் யாரும் இந்த விடயங்கள் தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை. அதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளையும் எங்களுடைய சுகாதார தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் மட்டக்களப்பு பிரண்டிக்ஸ் நிறுவனம் தொடர்பில் இன்னொரு வகையான பிரச்சனையும் பேசப்பட்டது. அது தொடர்பில் விசாரித்ததன் அடிப்படையில் கடந்த 3 வாரங்களாக கம்பஹாவிலிருந்து யாரும் வருகைதரவோ அங்கு செல்லவோ இல்லை. இருந்தாலும் எங்களுக்கிருக்கின்ற பொறுப்பின் அடிப்படையில் எழுந்தமானமாக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதே போன்று திருகோணமலை பல்கலைக்கழக்த்துக்கு கம்பஹாவிலிந்துந்து 20- 30 மாணவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரம், பொறுப்புவாய்ந்த சுகாதார தரப்பினர் என்ற வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுவது பொது மக்கள் அனைவரதும் கடமையாகும்.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன என்னுடன் கலந்துரையாடியுள்ளார். மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி எமது மாகாணத்தில் முகக் கவசம் அணிதலை கட்டாயமாக்குவதற்குரிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம். மிக விரைவில் அது தொடர்பான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடைய உதவியுடன் மேற்கொள்ளவிருக்கின்றோம்.
பொதுமக்களை நாங்கள் வேண்டுவது என்னவென்றால் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் கம்பஹா மாவட்டத்திலிருந்து உங்கள் அயலிலோ, வீட்டிலோ தெரிந்த இடத்திNலூ ஒரு வாரத்துக்குள்ளோ அல்லது தற்போதோ வருகை தந்திருந்தால் அருகிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்திலோ, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ  பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமோ, உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஆனால் நிச்சயமாக வருகின்ற அனைவரும் நோயாளிகள் அல்ல. மனிதத்தன்மையை மதித்து பொறுப்புத்தன்மையுடன் இருக்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அவர்களுக்குரிய அறிவுரைகளை வழங்கி எங்களுக்கு தகவல்களை விரைவாக வழங்குவீர்களாக இருந்தால், நிச்சயமாக உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க முடியும் அவர் தெரிவித்தார்