மட்டு மாநகர முதல்வரால்அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு.

0
98

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கும், இலங்கைக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலிக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று (25) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

சுற்றுலா மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தினை சுற்றுலா மையமாகவும், உல்லாசப் பிரயாணிகளுக்கு பாதுகாப்பான நகரமாகவும் மேம்படுத்துதல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் உள்நாட்டு உற்பத்திகளின் ஊடாக இளைஞர் யுவதிகளினதும், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினதும் பொருளாதார நிலையினை உயர்த்துவதற்கான திட்ட முன்மொழிவுகளும், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்குமான வசதிகளையும் உருவாக்குதற்கான வேண்டுகோளும் மாநகர முதல்வரால் உயர்ஸ்தானிகரிடம் முன்வைக்கப்பட்டன.

மேற்படி கலந்துரையாடலில் அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அபிவிருத்திக்கான செயலாளர்  டனில்லி கெசின் மற்றும் உயர்ஸ்தானிகரின் பாரியார் திருமதி ஹொலி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.