தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்காமல் வழிவிடுங்கள்!

0
107
இதயதீபம்தியாகிதிலிபனுக்கு தமிழ்மக்கள் அஞ்சலிசெலுத்துவது உரிமை!
போர்வீரர்களுக்கு நினைவுதினம் அனுஸ்ட்டிக்கமுடியமென்றால் இனத்திற்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுதினத்தை ஏன் அனுஸ்டிக்கமுடியாது?
ஊடகவியலாளர் சந்திப்பில் த.தே.கூ.முக்கியஸ்தர் தவிசாளர் ஜெயசிறில் கேள்வி.

(காரைதீவு சகா)


ஒட்டுமொத்த தமிழ்மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அபிலாசைக்காகவும் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தமிழர்களின் இதயதீபம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எவ்வித தடையும் விதிக்காமல் அரசாங்கம் வழிவிடவேண்டும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவுப்பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகச்சந்திப்பில் வேண்டுகோள்விடுத்தார்.

தியாகிதிலீபன் நினைவேந்தல் தொடர்பாக ஊடகச்சந்திப்பு நேற்று(20)ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில்:

யாழ்ப்பாணம் ஊரேழு எனும் கிராமத்தைச்சேர்ந்த தியாகி திலீபன்  பார்த்திபன் இராசையா எனும் பெயரைக்கொண்டவர். 1963நவம்பர் 29ஆம் திகதி  பிறந்தவர். தனது 24வது வயதில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு  தன்னுயிரை இனத்திற்காக ஈகம்செய்தார்.

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்துஇ அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.


அவர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் இதுவே. இது தவறா?
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

இந்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ஆயுதம்தூக்கியபடைவீரர்களை வருடாந்தம் நினைவுகூர்ந்து நினைவேந்தல்களை நடாத்தலாமென்றால் தனது இனத்தின் உரிமைக்காக ஆயதம் ஏந்தாமல்  மகாத்மாகாந்தியின் அஹிம்சைவழியில் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஈகம்செய்த தியாகி திலீபனுக்கு ஏன் நினைவேந்தல் செய்யமுடியாது?

இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனித உரிமை. அதுமட்டுமல்ல தமது மக்களின் சட்டரீதியான உரிமைகளுக்காக தமது உயிரை அர்ப்பணித்தவர்களை தனித்தும் ஒன்றுசேர்ந்தும் நினைவேந்தல்களை செய்யும் உரிமை ஜக்கியநாடுகள் சாசனங்கள் மற்றும் சர்வதேச பட்டயங்களின் மக்கள் கூட்டங்களுக்குள்ளது.


அந்தஅடிப்படையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனை நினைவேந்தல்  செய்வதற்கு தமிழ்மக்களுக்குள்ள உரிமையை ஏற்று அந்த நிகழ்வுகளுக்கு தடைவிதிப்பதை விலக்கி அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சகல தமிழ்க்கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அனைத்துதடைகளும் ஓரிருநாட்களில் நீக்கப்படவேண்டும்.அவ்வாறு செய்யாவிடின் தொடர்போராட்டங்களை நடாத்தவேண்டிவருமெனவும் ஜனாதிபதிக்கு கடிதங்களை அவசரமாக  மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒரே நீதி ஒரேசட்டம் என்று சொல்லிக்கொண்டுவருவதை உறுதிப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் மனநிலையையும் புரிந்துகொள்ளவேண்டும்.

தியாகி திலீபன் ஆயதம் தூக்கிப்போராடியவரல்ல. அவர் ஒரு தியாகி. அவர் வரலாறுஆகிவிட்டார். தமிழ்மக்கள் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்தகாலங்களிலும் வருடாந்தம் அவரது நினைவுதினம் கிரமமாக அனுஸ்ட்டிக்கப்பட்டுவந்திருக்கிறது.

இப்போது மட்டும் ஏன் அதற்குத் தடைவிதிக்கவேண்டும்? ஏன் தமிழ்மக்கள் அந்த இறந்த ஆத்மாவிற்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது? இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் சர்வாதிகாரப்போக்கை கட்டியம்கூறுவதாகஉள்ளது.
அரசாங்கம் தமிழ்மக்களையும் அரவணைத்துப் பயணித்தால் மட்டுமே உண்மையான சௌபாக்கியத்தை சுபீட்சத்தை நாடு அடையும்.


எனவே தியாகிதிலீபனின் நினைவேந்தலுக்கு வழிவிடுங்கள். இல்லாவிட்டாலும் தமிழ்மக்கள் அவரை ஏதோவிதத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் எதுவித ஜயமுமில்லை. என்றார்.