தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்;) முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(18) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

வாண்மைவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் ஏ.தரணிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையை நிறைவு செய்த 64ஆசிரியர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆசிரியர் சேவையின் தரம் 3 – 1 அ, ஆ ஆகிய வகுப்பிலிருந்து, அச்சேவையின் 2 – ii க்கு தரம் உயர்வு பெறவிருக்கின்ற ஆசிரியர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரகுபரன், மட்டக்களப்பு வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் சச்சிதானந்தம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வாண்மை விருத்தி நிலைய இணைப்பாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான வாண்மை விருத்தி நிலையம் உருவாக்கப்பட்டு முதன்முறையாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, பரீட்சையினை நிறைவு செய்த ஆசிரியர்களினால் வலய மற்றும் வாண்மை விருத்தி நிலைய அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.