கல்முனையில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு நிகழ்வு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வு நேற்று புதன்கிழமை அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் அதிதியாக கலந்து கொண்டு மர்ஹூம் அஷ்ரப் தொடர்பிலான நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

அத்துடன் அரபுக் கல்லூரி மாணவர்களினால் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டதுடன் மௌலவி எம்.எம்.ஜமால்தீன் தலைமையில் விசேட துஆப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸன் அக்தார், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.நிசார், ஏ.எம்.பைறோஸ் உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.