புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும்

கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட்
மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon)
இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு மூன்று கோரிக்கைகளை அவர்முன்வைத்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேச பார்வையினை மேலும்
வலுப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சனைகளைக்
கருத்திற் கொண்டு  அவற்றுக்கான தீர்வுகள்  உள்வாங்கப்படுவதற்காக சர்வேதேச
ரீதியிலான அழுத்தங்கள்  பிரயோகிக்கப்பட வேண்டும்.

மற்றும் எமது பிரதேசங்களில் காணப்படும் பெண் தலைமை தாங்கும்
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன்,  பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள
குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான
ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான திட்ட ஆவணங்களும் இதன்போது  இலங்கைக்கானகனேடிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.