மட்டக்களப்பில் பெண்களின்வாழ்வாதாரத்தை உயர்த்த ஈ.பி.டி.பி முன்வரவேண்டும்.

ந.குகதர்சன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பொருத்தமான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு மகளிர் அமைப்பினரால் ஈ.பி.டி.பி மாவட்ட அமைப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியை சேர்ந்த மகளிர் செயற்பாட்டாளர் மீனா அவர்களால் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் அமைப்பினருக்கும் ஈ.பி.டி.பி பிரதிநிகளுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணியளவில் கிராம மதகுருவான சிவபாலன் ஐயா அவர்களின் ஆசியோடு ஆரம்பமான இக்கூட்டத்தில், பெண்கள் சார்காக, பெண்கள் செயற்பாட்டாளர் மீனா உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

தமிழ் மக்களுக்காக இலங்கை முழுவதும் குரல் கொடுக்கும் ஒரேயொரு அரசியல் தலைவரென்றால் அது கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும், அவர் வலியுறுத்தும் அரசியல் கொள்கையே நடைமுறை சாத்தியமான அரசியல் கொள்கையென்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு, அரசியல், அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திப்பில் கலந்துகொண்ட பெண்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டபோது,

மீன்பிடி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அமைச்சினை பொறுப்பேற்று குறுகிய காலத்தினுள், மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகமாக உள்ளதால், அப்பெண்களின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஈ.பி.டி.பியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா உரையாற்றியபோது,

பெண்களுக்கு அதிக உரிமையும் சுதந்திரமும் வழங்கும் கட்சி எமது ஈழமக்கள் ஜனநாயன கட்சி என்றும், பெண்களுக்காக கடமையாற்றவும் குரல் கொடுக்கவும் ஆர்வமுள்ள பெண்கள் எமது கட்சியோடு கைகோர்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அம்மாநாட்டில் பெண்கள் அணிதிரண்டு வந்து எமது கட்சியில் இணைந்துகொள்ளவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

மாவட்ட மகளிர் மாநாட்டை தொடர்ந்து, விதவைப் பெண்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட திட்டங்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டளில் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஆரையம்பதி கிராம மகளிர் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.