ஹிஸ்புல்லாஹ்வின் பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்குத் தயார்; –

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அறிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் கூறப்பட்ட பாரதூரமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்க சபை ஒன்றில் அவருடன் விவாதிக்கத் தயார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இதற்கான அவசர சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கோரி காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் காத்தான்குடி உலமா சபைக்கும் அப்துர் ரஹ்மான் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;

எமக்கும் சகோதரர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை கடந்த தேர்தலுக்கு முன்பாக பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் உலமா சபை பிரதிநிதிகளும் முன்னின்று நடத்தினீர்கள். அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் சமூக நன்மையை கருத்தில் கொண்டே அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உறுதியளித்திருந்தீர்கள். அந்த நோக்கங்களின் பெறுமதியை உணர்ந்து கொண்டதன் காரணமாகவே அவற்றில் நாமும் பொறுப்புடன் பங்கேற்றோம்.

கடந்த தேர்தலைப் பொறுத்தவரையில் எமது மண்ணுக்கான பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதுவே எல்லோரதும் பொது சமூக நோக்கமாக இருந்தது. அதற்காக பல்வேறு உபாயங்கள் பல்வேறு தரப்பினராலும் முயற்சிக்கப்பட்டது. ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் நாமும் அவ்வாறான பல முயற்சிகளை செய்தோம். முடியுமான எல்லா வழிகளிலும் முயற்சிக்குமாறும் நீங்களும் எமக்கு ஆலோசனை வழங்கி இருந்தீர்கள்.

ஹிஸ்புல்லாவுடனான பேச்சுவார்த்தையை பொறுத்தவரையில் இறுதி நேரத்தில் மிகப் பெறுமதியான விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கு முடிவு செய்து, அதனை அவருக்கு உடனடியாகவே அறிவித்தும் இருந்தோம். அவற்றை அவர் பொருட்படுத்தவுமில்லை. பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய தங்களுக்கு தெரிவிக்கவும் இல்லை. எமது இறுதி நேர முன்மொழிவுகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால் எமது மண்ணுக்கான பிரதிநிதித்துவம் கடந்த தேர்தலில் மிக இலேசாக வென்றெடுக்கப்பட்டிருக்க முடியும். அதனை அவர் புறக்கணித்ததன் காரணமாக அது சாத்தியப்படவில்லை. இறைவனுடைய நாட்டத்தின் படியே எல்லாம் நடந்து முடிந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எல்லோரும் அதனை பொருந்திக் கொண்டோம்.

மேலும், சமூக நோக்கங்கள் எனப்படுவது தேர்தலோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தேர்தல்களுக்கு அப்பாலும் எல்லா தரப்பினரும் இணைந்து சமூகத்துக்காக பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான தேவை தேர்தலுக்குப் பிந்திய தற்போதைய சூழலில் இன்னும் அதிகரித்துள்ளதை எல்லோரும் உணர்கின்றனர்.

இருந்தாலும் தேர்தல் காலத்தில் அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் விதத்தில் ஹிஸ்புல்லா நடந்து கொள்ளவில்லை. எதிர்கால சமூக அரசியல் ஒற்றுமை பற்றி பொருட்படுத்தாமல் தேர்தலை மாத்திரம் குறியாக வைத்தே பல பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரையும் துஸ்பிரயோகம் செய்கின்ற அளவுக்கு அவர் சார்ந்த தரப்பினரால் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அதனை தங்கள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்திருந்த நான் நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இருந்தேன்.

தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் சமூக அரசியல் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல மோசமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட தொடங்கியிருக்கின்றன. இது எதிர்கால சமூக நலன்களுக்கு ஆரோக்கியமானதல்ல. அரசியலைப் பொறுத்தவரையில் தனி நபர் பதவிகளுக்கு அப்பால் அரசியல் அதிகாரங்களை பெறுவதும் அதனை சமூகத்துக்காக பயன்படுத்துவதும் அதற்காக சகல தரப்பினர் மத்தியில் ஒற்றுமையினை கட்டியெழுப்புவதுமே சமூக நோக்கமாகும்.

அந்த நோக்கத்திற்கு விரோதமான பல நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுவது கண்டு கவலையும் விசனமும் அடைகின்றேன். இந்த விடயங்கள் தொடர்பில் ஹிஸ்புல்லா அவர்களுடன் உங்கள் முன்னிலையில் சமூக நலன்களை மையப்படுத்திய ஒரு விரிவான பேச்சுவார்த்தையினை நடத்த விரும்புகிறேன். கடந்த தேர்தலுக்கு முன்னர் ‘ஹிஸ்புல்லா சார்பு அதிபர் குழு’ முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவசர அவசரமாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தது போன்று தற்போது, தான் கோரியுள்ள கலந்துரையாடலை அவசரமாக ஓரிரு தினங்களில் ஏற்பாடு செய்வீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.