அம்பாரை மாவட்ட ச.தொ.ச ஊழியர்கள் கடும் கவலை ஜனாதிபதியிடம் முறையிடவும் முடிவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூ.மொ.விற்பனை நிலையங்களில் (Sathosa)பணியாற்றிய ஊழியர்கள் மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,கடும் கவலையடைந்துள்ளனர்.திடீரென இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது மட்டுமன்றி புதிய இடங்களில் அவசரமாப் பணிகளுக்குச் செல்லுமாறும் இவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிறுத்தப்பட்டுள்ளது.தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றிய இவ்வூழியர்கள் கொழும்பு, குருநாகலை, கண்டி,காலி போன்ற தூரப்பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதால்,கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதிகாரி ஒருவரின் ஒருதலைப்பட்சமான முடிவினாலே இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.மாதாந்தம் 21,000 ரூபாவையே அடிப்படைச் சம்பளமாகப் பெற்றுவந்த இர்களுக்கு வெளி மாவட்டங்களில் பணியாற்றுவது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமெனக் கவலைப்படும் இவ்வூழியர்கள், தொழிலுக்குச் செல்வதா?அல்லது அவற்றைக் கைவிடுவதா என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் அம்பாரை மாவட்டத்தின் எந்தப்பகுதிகளிலாவது தங்களை இடமாற்றுமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.மேலும் இவ்விடமாற்றம் சொந்த மாவட்டத்திலே நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற ஜனாதிபதியின் புதிய நியதியையும் மீறியுள்ளது. இதனால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பந்துலகுணவர்தன, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ஆகியோரிடம் தெரியப்படுத்துவதற்கு அம்பாரை மாவட்ட ச.தொ.ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்முதற் கட்டமாக மிக விரைவில், தேசிய காங்கிரஸ் தலைவரை இச்சங்கம் சந்திக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இவ்வாறு சுமார் இருநூறு ஊழியர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.