விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

(க.கிஷாந்தன்)

ஊவா – வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை – மஹியங்கனை வீதியில் சொரனாதொட்ட பகுதியில் வைத்தே இன்று (02.09.2020) அதிகாலை 2.50 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், விபத்துக்குள்ளான ஐவரில் நால்வர் பெண்கள் என்றும், அவர்களில் ஒருவர் கர்ப்பணி தாயென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரை செலுத்திய விரிவுரையாளர் நித்திரை கலக்கத்தில் இருந்தாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.