குழந்தைநல வைத்திய நிபுணரின் மாதாந்த சிகிச்சை செயற்பாடுகள்

பொன்ஆனந்தம்
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  புதன்கிழமை காலை 8.30மணியளவில் குழந்தைநல வைத்திய நிபுணரின் மாதாந்த சிகிச்சை செயற்பாடுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தம்பலகாமத்தில் சுமார் 35 000 எண்ணிக்கையான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உள்ள குழந்தைகளுக்கு விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனை தேவைப்படும் பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அல்லது கிண்ணியா, கந்தளாய் தள வைத்தியசாலையினை நாடவேண்டி உள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

இதனைக்கருத்தில் கொண்டு கந்தளாய் தள வைத்தியசாலையின் குழந்தைநல வைத்திய நிபுணர் டாக்டர் நிலக்சி மதுரப்பெரும அவர்கள் தன்னுடைய சேவையினை இன்று தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்தார்.

கடந்த மாதம் கந்தளாய் தள வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் கயானி சிறிவர்த்தன அவர்கள் தன்னுடைய மாதாந்த சேவையினை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது