13ஐப் பலமிழக்க வைக்கும் அரசின் மூல உபாயத்திட்டத்திற்கு  தமிழ் தரப்பே காரணம்

-. கலாநிதி எம் பி ரவிசந்திரா
ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலை பற்றிக் கூற முடியுமா?

இலங்கை அரசியல் வரலாற்றில் நிலைபேறான ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசு நாம் விரும்பிய வகையில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்தக்கூடிய அதிகார வல்லமையைப் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலை ஆனது அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறித்துரைத்த அரசியலமைப்பு மாற்றம், 19 ஆவது சட்ட திருத்தத்தை செயலிழக்கச் செய்தல் முதலான பல்வேறு செயற்பாடுகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.

இதேவேளை பூகோள ரீதியில் அயலுறவுக் கொள்கைகளில் வலிமை சேர்க்க வேண்டிய தேவைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளது. அரசின் வெளியுறவுக் கொள்கை நோக்கிய பார்வையானது சீன அரசியல் வலவவாக்கலுடன் இந்திய உறவை பகைத்துக் கொள்ளாத ஒரு நட்பு மெத்தனப் போக்கையும், மேற்குலக அரசியல் நகர்வில் ஒரு மென்போக்கையும் கடைப்பிடிக்க முயற்சிக்கிறது. மேலும் 19ஆவது திருத்தத்தில் வலியுறுத்தப்பட்ட ஜனநாயக மீஉயர் பண்புகளுக்கு தடைகள் கூட எத்தனித்துள்ளது எனலாம்.
சிறுபான்மை சமூக நலன் சார்பாக எடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பாக?
இலங்கை சிறுபான்மைச் சமூகங்களை பொறுத்தவரையில் ராஜபக்ச ஆட்சி என்பது எஜமான் அடிமை நலல் சார்ந்ததாகவே பார்க்கப்பட வேண்டிய ஒன்று. தனது எஜமானருக்கு அடிமை எவ்வளவு விசுவாசமாக இருக்கிறானோ அதற்கேற்ற சலுகைகளை வழங்குதல் கோட்பாடு. மறுவகையில்  ‘இரந்து கேட்பவனுக்கு பிச்சை இடல்’ என்ற கைங்ரியத்தை கொண்டது. ஏனெனில் ‘சிறுபான்மை சமூகத்தின் உரிமை அரசியலை’ ராஜபக்சக்கள் விரும்பவில்லை. அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற சலுகை நிவாரணங்கள் மூலம் உரிமை அரசியலை நீர்த்துப்போகச் செய்யும் மூல உபாயங்களை கையாள்கிறது. ‘ஒரே தேசம் ஒரே நாடு, ஒரே தேசம் ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டு ரீதியான கருத்தாடல்கள் இதனை வலியுறுத்தி நிற்கின்றன. ஏனெனில் தேசியவாத சிந்தனை யின் உச்சத்தில் பெரும்பான்மை சமூகம் இன்று அணி திரட்டப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடுகளை தேர்தல் முடிவுகள் அண்மித்திருந்தன
13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுமா?
13ஆவது திருத்தத்தை நீக்குவது என்பது இந்திய அயலுறவுக் கொள்கையில் ஒரு முரண் நிலையை தோற்றுவிக்கலாம்.  ஆதலால் அரசானது 13 இல் உள்ள நிதி, காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கும். அதிகாரமற்ற ஒரு சுயாட்சி அலகை சிறுபான்மை சமூகத்திற்கு வழங்குவதால் அரசியலுக்கு தீர்வு காணமுடியாது . ஆதலால் அரசு இத்தேர்தலில் ‘அரசியலமைப்பு திருத்தம் ‘ தொடர்பான வாக்குறுதியை மக்களிடம் ஜனநாயக ரீதியாகப் பெற்று அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை நிலை நிறுத்தியுள்ளது. எனவே பெரும் தேசியவாத எழுச்சியில் சிங்கள இராச்சியத்தில் அயலுறவு பகைத்துக் கொள்ளாமல் 13ஆவது திருத்தத்தை பின்வரும் மூல உபாயங்களை காரணம் காட்டி மாற்றி அமைக்கலாம.
01. 31 ஆண்டு கால மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாடுகள். இவை மக்களுக்கும் நாட்டிற்கும் எந்த அளவுபயனுடையதாக இருந்தது பற்றிய மீளாய்வுகள் இதனை வலியுறுத்துகின்றன.
02. இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இந்தளவு மாகாணங்களின் ஆட்சி அதிகாரமானது  பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
03. இந்தியாவில் 7.5 கோடி தமிழ்மக்களுக்கு தமிழ்நாடு ஒரு மாநிலம். இவ்வாறிருக்க இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டரை கோடி. எனவே இங்கு ஒன்பது மாகாணங்கள் தேவையா? என்பது அரசின் வாதம்.
04. மாகாண எல்லை மீள் நிர்ணயத்தின் மூலம் ‘ஒரே நாடு -ஒரே சட்டம்’ என்ற கோட்பாடு மிக இலகுவான முறையில் முன்னெடுக்க ஐரோப்பியர் ஆட்சிக்கு முன் இராச ரடடை, மாயாரட்டை, உருகுண  ரட்டை, கோட்டை இராச்சியம் எனப் பிரிக்கப்பட்டிருந்ததோ அதுபோல் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களை அதற்கு அருகாமையில் உள்ள பெரும்பான்மைச் சமூகங்கள் வாழும் மாகாணங்களுடன் இணைத்து மாகாண அங்கத்தவர் தொகைகளை மட்டுப்படுத்தி நான்கு மாகாணங்களாக அல்லது ஐந்து மாகாணங்களாக மாற்றியமைத்தல்.
 இதன் மூலம் எல்லா மாகாணங்களும் எவ்வித நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம்,  காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவித்துவிடும். இதன் மூலம்  ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.  மாகாணங்களுக்குரிய  அதிகாரங்கள் வழங்கப்பட்டதாக காட்டப்படும்.
பிரதான அரச கரும மொழியாக சிங்கள மொழி எல்லா மாகாணங்களிலும் ஆட்சி மொழியாக மாறிவிடும். சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் மொழி அரசகரும மொழியாக இருக்கும். ஆட்சி அதிகார மொழியில் தேசியகீதம் இசைக்கப்படும்.எனவே அரசியலமைப்பு மாற்றம் நடைபெறுவதன் மூலம் மாகாண ஆட்சி முறையை மாற்றலாம்.
 அரசியலமைப்பு மாற்றத்திற்கு முன்னர் அல்லது மாற்றத்தில்  13ஆவது திருத்தத்தில் இவ்வாறு சீர் திருத்தம் செய்யலாம்.
 இங்கு பிரச்சினை 13வது திருத்தச் சட்டம் இந்திய ராஜரக நலன் சார்ந்தது. ஆயினும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுக்கான ஒரு படியாகவும் அமைந்த ஒரு சர்வதேச ஒப்பந்தம். அதில் வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பு என்பது சர்வசன வாக்கெடுப்பு மூலம் குறித்த ஐந்து ஆண்டுகளுக்குள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.  மாறாக நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சட்டரீதியாக பிரிக்கப்பட்டு மாகாண சபைத்  தேர்தலும் அதற்கான ஐந்தாண்டு கால ஆட்சிகளும் இருவேறுபட்ட முதலமைச்சர்களின் கீழ்  நடைபெற்று விட்டது. எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு .ராஜதந்திர ரீதியில் முழுமையாக நிறைவேற்றாமல் இலங்கை 31 ஆண்டுகள் காலம் கடத்தியதோ,  அதேபோல் 13வது திருத்தம் மாகாண எல்லை மீள் நிர்ணயம் மூலம் வலுவிழக்கப் போகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் பலவீனமடைய பலவீனப்பட தமிழ் தரப்பே காரணம் என கூறப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பாக?
அதில் உண்மை இல்லாமல் இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் யாழ்ப்பாண சுதுமலைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் ‘இந்திய அரசை நம்பி எமது மக்களின் பாதுகாப்பை ஒப்படைக்கிறோம்’ எனக்கூறி ஆயுதக் கையளிப்பை நிகழ்த்தினார்.  அதன்பின் ஒப்பந்த நடைமுறை தொடர்பாக இழுபறி நிலமைகளும் புலிகள் இந்திய இராணுவ மோதல்களும் அழிவுகளும் இடம்பெற்றன. அன்றைய  காலகட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த முதலாவது மாகாண சபைத் தேர்தலை அநேக தமிழ்த் தரப்புகள் பகிஸ்கரிக்க ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழீழ விடுதலை இயக்கம், புளொட் போன்ற அமைப்புகள் போட்டியிட்டு ஆட்சி அமைத்தன  வரதராஜ பெருமாள் முதலமைச்சரானார்.
 அப்போது இந்த மாகாண முறைமை அமுலாக்கல் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் ஆலோசனையில் வரதர் தமிழீழ பிரகடனம் செய்தார். அத்தோடு இரண்டாம் கட்ட பிரச்சனை ஆரம்பமாகியது.
அதன் பின்னர் இந்திய இராணுவம் வெளியேற மாகாணத்தினை நடத்தியவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் . மாகாண மக்களாட்சி முறை முடக்கி விடப்பட்டது. அதன் பின்    வடக்கு கிழக்கு சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டு இரு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது தமிழ்த் தரப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண தேர்தலை பகிஷ்கரிக்க, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆட்சியை கைப்பற்றினர்.
அவர்களையும் துரோகிகள் என்றனர். அதன்பின் 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்  தேசியத் தரப்பு போட்டியிட்டனர். அதேபோல் வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் ஆட்சி அமைத்தனர்.
 உண்மையில் இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் தமிழ் தரப்பு எடுத்தவுடன் எந்த ஒரு ஆரம்ப புள்ளியையும் எந்த ஒரு விடயத்திலும் நிதானமாக சிந்தித்து ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் நிராகரிப்பு அரசியலாகவே செய்தனர். மேலும் செயல்திறனுள்ள செயற்பாடுகள் முன்நகர்த்தப்படவில்லை சந்திப்புக்கள் வெறுமனே அறிக்கைவாத அரசியலே நடந்தேறின. மேலும் . காலத்துக்கு காலம் நடைபெறும் தேர்தல்களில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அமைப்பை, அதிகாரப் பகிர்வை கருத்தில் எடுப்பதில்லை. மாறாக சமஸ்டி, தனிநாடு, ஒரு நாடு இரு தேசம் என்ற கோட்பாடுகளையே முன்னெடுத்திருந்தனர். 2020 தேர்தல் பிரச்சாரமும் சமஸ்டி பற்றியதாகவே இருந்தது.
இதனால் இந்தியாவின் கரிசனையும் ஈடுபாடும் ‘புண்ணுக்கு விஷமா மருந்துக்கு விஷமா’ என்ற நிலைப்பாட்டை அடையத் தொடங்கியது.
 அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா மௌனம் சாதித்தது. அதன் பயனை தமிழ் தரப்பு இப்போது உணரத் தொடங்கியுள்ளது. இருந்ததையும் கைவிட்ட நிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் மீண்டும் இந்தியா நோக்கி அறைகூவல் விடுக்கிறது.  இந்த நிலைமைகளை ஸ்ரீலங்கா ஆளும் தரப்பு நன்கு கவனித்து திட்டமிட்டு காய்களை நகர்த்தி13ஐ சக்தி இழக்கச் செய்ய முன்னோக்கி நகர்கிறது.
தமிழ் தேசியம் பேசுவோர் தொடர்பாக நீங்கள் கூற வருவது என்ன?
எதற்கெடுத்தாலும் இனவாத கண்கொண்டு பார்க்காமல் தீர ஆராய்ந்து முடிவுகள் கட்டப்பட வேண்டும். போரின் வலிகளைச் சுமந்த அவர்களுக்கு நன்மையான அனுகூலமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும். அரசியல் குத்து வெட்டுக்கள் குழி பறிப்புக்கள், தனிநபர் மோதல்கள், கட்சிகளை தவிர்த்து தமிழ் தரப்பு பலம் பொருந்திய அணியாகத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பொது யாப்பு தயாரிக்கப்பட்டு அனைத்து தரப்பும் உருவாக்கப்படுதல் வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் ஏகபோக உரித்துடையது அல்ல. அது தமிழ் மக்களின்  தியாகங்களில் உருவானது. இதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களுக்காக அரசியலே தவிர. கட்சிகளுக்காக அரசியல் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.