வடகிழக்குப்பகுதிகளில் நியாயம் கேட்டு வீதிக்கு இறங்கிய மக்கள் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணிகள்.

0
103
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணிகள் எற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மேற்காள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி எழுச்சியுடன் இடம்பெற்றது.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் அவருக்கெதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு அமைவாக அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி அவர்களின் தலைமையில் இப்பேரணி இடம்பெற்றது.

இப்பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் மூன்று மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், ஏனைய அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது மட்டக்களப்பு காந்திப் பூங்கா வரை வந்தடைந்து இறுதியில் அருட்தந்தையர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது காலை பத்து முப்பது மணிக்கு கடற்கரை முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஆளுநர் அலுவலகம் நோக்கி செல்வதற்கு ஆயத்தங்களை மேற்கொண்டனர் திருகோணமலை துறைமுக போலீசார் கவனயீர்ப்பு போராட்டம் செய்வதற்கு தாம் அனுமதி வழங்குவதாகவும் வீதிகள் ஊடாக ஊர்வலம் செல்வதற்கு தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்கள் இதனால் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஒரு முறுகல் நிலை தோன்றியிருந்தது இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்பதால் தாங்கள் அமைதியான முறையில் ஊர்வலம் செல்வதற்கு அனுமதிக்குமாறு மட்டமாக போலீசார் அவர்கள் கேட்டுக்கொண்டனர் இருப்பினும் மேல் அதிகாரிகளின் அனுமதி இன்மை காரணமாக தாங்கள் வீதியில் ஊர்வலம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என உறுதியாக தெரிவித்தார் பின்னர் பதினொன்று முப்பது மணிக்கு அங்கிருந்தவர்கள் பஸ் வண்டிகளில் ஏறி திருகோணமலை மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஒன்றுகூடி 11 45 மணிக்கு மத்திய பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 அத்துடன்  வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழில் இடம்பெற்றது. நேற்று காலை 10 மணியளவில் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான இவ் கவனயீர்புப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக கண்டி வீதியை வந்தடைந்து யாழ் மாவட்டச் செயலகத்தில் நிறைவுற்றது.