அமிர்தலிங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசிற்கு தமிழ் இளைஞர்கள் விலைபோனார்கள்.

0
97

வீ.ஆனந்தசங்கரி

அமிர்தலிங்கம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசிற்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக்கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று கௌரவ சரத் பொன்சேகா அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

 என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பாராளுமன்றத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அவர்களின் உரையை உற்று நோக்கினால் விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது வெளிப்படையான உண்மையாகும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தெரியாதா? தெரிந்திருந்தும் அவருக்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இதை நான் அன்றே சொன்ன பொழுது என்னை துரோகி என்றார்கள் ஆனால், இப்போது சரத் பொன்சேகாவே பாராளுமன்றத்தில் “தேசியம், சுயநிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனிற்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் அன்றைய அரசினுடைய முழு ஒத்துழைப்போடு தான் நடந்தேறியதென்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார். அமிர்தலிங்கம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசிற்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக்கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று கௌரவ சரத் பொன்சேகா அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் தோன்றிய மொழியும் மூத்தகுடியும் தமிழும், தமிழர்களும் தான் என்பது உலகிலுள்ள அனைத்து இன மொழி மக்களிற்கும் தெரிந்த ஒரு விடயம். தகவல் தொழில்நுட்பம் மிக வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் ஐந்து வயது சிறுவர்களுக்கே இந்த உண்மை தெரியும். நிலைமை இவ்வாறு இருக்கும் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அவர்கள், பாராளுமன்றத்திற்கு சென்று தான் இதை பேசி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கைத்தொலைபேசியிலேயே ஒரு தட்டுத்தட்டினால் தெரிந்துவிடும். இதை பேசியதால் புதிய வடிவில் ஒரு பிரச்சினை கிழம்பியுள்ளது. தமிழ் மக்கள் எதிர் நோக்கும் தீர்வு மற்றும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்ற இந்த நேரத்தில், இதை நிரூபிப்பதற்காகத்தான் பாராளுமன்றம் அனுப்பினோமா என்று இவருக்கு வாக்களித்த மக்கள் விசனமடைந்துள்ளனர்.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுவதில் அர்த்தமில்லை. இப்போது எமது மக்களுக்கு என்ன தேவை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக்கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த விவாதம் பாராளுமன்றத்தின் கால எல்லை முடியும் வரையும் தொடரும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளும் அவருக்கு அதிகரிக்கும். 2010ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர் பார்ப்புகளையும் பற்றி அக்கறையில்லாமல் செயற்படுவதால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் “தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தீர்க்கதரிசனமாக கூறினாரோ தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.