தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளை ஒத்ததான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவர்களோடு இணைந்து பயணிக்க தயார்

0
123

பா.உ. கலையரசன்

(வி.சுகிர்தகுமார்)

கடந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியதற்கு சில உதாரணங்கள் உள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு வருகை தந்த அவரை மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் நாம் பல ஏமாற்றங்களை பெரும்பான்மை தலைவர்களால் எதிர்கொண்டுள்ளோம். குறிப்பாக இரு பெரும்பான்மை கட்சிகள் இணைந்த கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் நாம் இணைந்து பயணம் செய்தபோதும் சில விடயங்களில் நன்மையடைந்தாலும் மக்களின் தீர்வு விடயத்தில் முன்னேற்றம் காணப்படவில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இவ்வாறுதான் கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்களால் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றார்.

இதேநேரம் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளை ஒத்ததான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவர்களோடு  இணைந்து பயணிக்க தயார் எனவும் ஒற்றுமையின் அடிப்படையில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அதிக ஆசனத்தை பெறுவதற்குரிய முயற்சியை நாம் மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் பலமான கட்டமைப்பை அம்பாரை மாவட்டத்தில் உருவாக்குவதுடன் பல பணிகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. ஆனாலும் கடந்த தேர்தலில் சிலர் மாற்று முடிவுகளை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் அவர்களையும் இணைத்தே எமது பயணம் தொடரும் என்றார்.

இதேநேரம் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்டம் இன்னும் முழுவதுமான அபிவிருத்தியினை அடையவில்லை.  குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவற்றையெல்லாம் முன்னிறுத்தி எமது செயற்பாடு தொடரும் எனவும் கூறினார்.