மட்டு. கொம்மாதுறையில் வாள்வெட்டு: மாணவன் பலி, இருவர் காயம்!

0
135

சீலாமுனை துஷாரா- 

மட்டக்களப்பு கொம்மாதுறைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மாணவன் ஒருவன் பலியானதுடன் அவரது உறவினர் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கலடி பிரதேசத்திலுள்ள பாடசாலை கல்வி பயிலும் செங்கலடி மற்றும் கொம்மாதுறை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சந்தை வீதியைச் சேர்ந்த 14 வயதான மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது உறவினர்களான இருவரும் வெட்டுக் காயங்களுக்குள்ளாகிய சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாணவனின் சடலத்தை சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வாள் ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.