நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். நீதி அமைச்சர் அலிசப்ரி

0
133

 (சில்மியா யூசுப்)

எனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி நமது சமுதாயத்துக்குகிடைத்த கெளரவம். . நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை  துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை  கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன்  இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அதாஉல்லா ,

மற்றும் மர்ஜான் பலீல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஏ. எல்.எம். உவைஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் ஸரூக் ஏற்பாட்டில்  இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமேல்மாகண ஆளுநர்  ஏ.ஜே. எம். முஸம்மில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை தலைவர்கள், பிரதேச சபை தலைவர்கள், உள்ளூராட்சிமண்ற உறுப்பினர்கள், முன்னாள் தூதுவர்கள், நிறுவன தலைவர்கள், வியாபாரிகள், சர்வமத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலின்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளித்து அவரின் வெற்றியில் பங்காளிகளாகவேண்டும் என நாங்கள் முஸ்லிம்களுக்கு தெரிவித்து வந்தோம். ஆனால்  ராஜபக்ஷ்வினர் தொடர்பாக எதிர்த்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள் மேற்கொண்ட பொய் பிரசாரங்களால் குறிப்பிடத்தக்க வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு கிடைக்கவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 5வீதமாகும்.

அதேபோன்று நடந்துமுடிந்த பொதுத் தேர்தலின்போதும் அரசாங்கம்  பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைவது உறுதியென தொடர்ந்து தெரிவித்தேன். அதன் பங்காளிகளாக முஸ்லிம் சமூகமும் இருக்கவேண்டும் என்பதற்கே நாடுமுழுவதும் பிரசாரங்களை மேற்கொண்டோம். ஆனால் எதிர்த்தரப்பு மேற்கொண்ட பொய் பிரசாரங்களையும் எதிர்த்து சமூகத்தை தெளிவுபடுத்தியதனால் இந்த தேர்தலில் முஸ்லிம்கள் 27வீத வாக்குகளை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கின்றனர். அதன் பயனாகவே தேசிய பட்டியலில் 3பேருக்கு இடம் கிடைத்திருக்கின்றது.

மேலும் நீதி அமைச்சுப்பதவியோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ நான் கேட்டு பெற்றுக்கொண்டதல்ல. ஜனாதிபதியின் அமைச்சரவையில் நான் இருந்தாகவேண்டும் என ஜனாதிபதி என்னை அழுத்தமாக வேண்டிக்கொண்டதற்கமையவே இதனை ஏற்றுக்கொண்டேன் என்றார்.