அம்பாறை மாவட்டம் முழுக்க புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் – பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் மருதமுனையில் தெரிவிப்பு.

0
87
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் நான் சேவை செய்வேன். எம்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் வாக்குரிமைக்கு பெறுமானத்தை பெற்றுக் கொடுப்பேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சி ஊடாக அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள முஸாரப் முதுநபீன் தெரிவித்தார்.

கட்சியின் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு மத்தியகுழுத் தலைவர் கலீல் முஸ்தபா தலைமையில் (13) இரவு மருதமுனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது, மனித சமூகம் வாக்குரிமையை பெற்றுக் கொள்வதற்காக பல தியாகங்களை செய்துள்ளது. வாக்கின் பெறுமானம் வெறும் ஒருசில ரூபாய்களுக்கோ அல்லது சில அன்பளிப்பு பாரிசல்களுக்கோ உரித்துடையது அல்ல இதனை முதலில் இந்த மாவட்ட மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அப்பாவி மக்களின் வாக்குரிமையை சில அரசியல்வாதிகள் அரசியல் முதலீடாக பார்கிறார்கள். பணத்தை கொடுத்து வாக்கை பெற்றுக் கொள்வது பின்னர் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தின் ஊடாக இலாமமீட்டும் ஒரு தொழிலாக அரசியலை பயன்னடுத்தும் கலாசாரம் எமது மாவட்டத்தில் உள்ளது. இந்த அரசியல் கலாசாரத்தை உடைத்தெறிந்து புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நான் முன்னெடுத்துள்ளேன்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் இந்த புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டம். அதனை செய்ய முடியும் என நான் நம்புகிறேன். மக்களுக்கா அரசியல் வாதி எனும் நிலையை உருவாக்க வேண்டும். மக்கள்தான் அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும். நான் பொத்துவில் பிரதேசத்தில் தேர்தலுக்காக பணத்தை செலவு செய்யவில்லை மக்களதான்; செலவு செய்து என்னை தெரிவு செய்தார்கள். அதனால் நான் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருக்கின்றேன். மக்கள் நம்பிக்கை வைத்து தெரிவு செய்துள்ளார்கள். மக்களுக்கு எதனையும் செய்வதை விட எனக்கு எதுவும் தெரியவில்லை.

முழு மாவட்டத்திற்குமான பாராளுமன்ற உறுப்பினராக நான் இருக்கின்றேன். எல்லா மக்களினதும் தேவைகளை ஊடகவியலாளராக இருந்து தெரிந்து வைத்திருக்கிறேன். இவற்றை தீர்த்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட வை.கே.ரஹ்மான் உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.