சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்ற வேறுபாடில்லாமல் முழு நாட்டிற்கும் சமமான அபிவிருத்தி செய்வோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச கல்முனையில் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்  ,பாறுக் ஷிஹான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் எஸ்.சாந்தலிங்கம் தலைமையில் கல்முனை நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை (22) நடைபெற்றது.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும்போது,

மக்களுக்கு நாம் பொய் சொல்வதில்லை. செய்ய முடியும் என்பதை மட்டுமே சொல்லுவோம். சொல்லுவதை மட்டுமே செய்வோம். இது உங்களுக்கு நன்றாக தெரியும்.  முன்னைய அரசாங்கம் காசு இல்லை காசு இல்லை என்று நான்கு வருடத்தை கடத்தினார்கள். ஆனால் மத்திய வங்கியில் பில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்தார்கள். இதுவும் உங்களுக்கு நன்றாக தெரியும். முப்பது வருடமாக புரையோடிப் போயிருந்த யுத்தத்தை இல்லாமல் செய்து மக்களுக்கு சுதந்திரத்தை நாமே பெற்றுக் கொடுத்தோம். அப்போது காசில்லை என்று நாம் சொல்லவில்லை மக்களுக்கு அபிவிருத்திகளையும் செய்தோம்.

நாம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இனம், மதம், மொழி பார்ப்பதில்லை. யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாந்தோட்டை வரைக்கும் கொழும்பு தொடக்கம் கால்முனை வரைக்கும் முழு நாட்டு மக்களுக்கும் சமமான அபிவிருத்தியை செய்வதே எமது நோக்கமாகும். தாமரை மொட்டின் வெற்றி உங்களின் வெற்றியாகும். உங்களின் வெற்றி எமது நாட்டின் வெற்றியாகும் என்று தெரிவித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர்களாக றிஸ்லி முஸ்தபா, கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க,  கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.றபீக் உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றும் போது கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் பேசும் மக்கள் பிரதமருக்கு அமோக வரவேற்பளித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.