இந்தியாவின் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். திருமலையில் வரதராஜப்பெருமாள்

(கதிரவன் வேதாந்தி)

இந்தியாவின் நண்பர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளானால்தான் இந்தியா தமிழ் மக்களுக்காக வரும் இந்தியா நமக்காக வரவேண்டுமென்றால் இந்தியாவின் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர் சமூக ஜனநாயக கட்சி தேர்தல் பரப்புரைக்கூட்டம் திருகோணமலை  மூன்றாம் கட்டை சந்தியில்  நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
கட்சியின் அமைப்பாளரும் முந்நாள் வடக்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சருமான வரதராஜ பெருமாள்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தியா நமக்காக வரக்கூடாது என்றால் இந்தியாவின் நண்பர்களுக்கு நீங்கள் வாக்களிக்கவேண்டாம்.இந்தியா வேண்டாம் என்றால் இந்தியாவை எதிர்த்து அமெரிக்காவை விரும்புகின்றவர்களுக்கு வாக்குப்போடுங்கள்.

இந்தியாவின் அனுமதி ஒப்புதல் ஏற்றுக்கொள்ளல் இன்றி எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் இலங்கைக்கு கால்வைக்கமுடியாது.

அமெரிக்காவின் கப்பல்வந்து நம்மக்களைக்காப்பாற்றும் என்று நம்பியபடியால்தான் முள்ளிவாய்க்காலில் நம்மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களின் நண்பனாக இருந்த இந்தியாவை தமிழர்களின் பகைவனாக மாற்றியது நமது தமிழர்களே.

புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் வரமுடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க சிங்கள மக்கள் சர்வசனவாக்குரிமையில் ஆதரவாக வாக்களிப்பார்கள் எனநினைக்கின்றீர்களா?

நாம்மாற்றி யோசிக்கவேண்டும் ஏன் யோசிக்கதெரியாதவர்களா நமது தமிழ் மக்கள்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஊடாக மாகாணசபைக்கு அதிகாரங்களை அதிகரிக்க கடந்த  5வருடங்கள் எமக்கு சந்தர்ப்பம் இருந்தது அந்த சந்தர்ப்பத்தை வீணாக்கிவிட்டார்கள்.

எங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் நாம் செய்து காட்டுவோம்.நாம் செய்து காட்டியவர்கள் அது உங்கள் எல்லோருக்கம் தெரியும்.

நாம் 19வயதில் சிறைக்கு சென்றவர்கள் அப்போ எங்களுக்கு உள்ளுராட்சிமன்றத்தேர்தலோ பாராளுமன்றத்தேர்தலோ இதன் ஊடாக பணம் உழைக்கலாம் என்று எங்களுக்கு தெரியாது நாம் சென்றது ஒடுக்குமுறை ,சாதியம் ,பிரதேசவேறுபாடு, சுரண்டல் என்பவற்றை இல்லாமல் செய்யவே புறப்பட்டோம் என்றார்.