கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

 

(பாண்டிருப்பு) கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு சுயலாப சுயநல வாழ்க்கையில் ஊறி நிற்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சின் மட்டு மாவட்ட முன்னாள் இணைப்பாளரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு மாவட்ட வேட்பாளருமான க.கோபிநாத் தெரிவித்தார்.

பட்டிருப்பு தொகுதியிலுள்ள மகிழூர், கல்லாறு போன்ற பிரதேசங்களில் மேற்கொண்ட பிரசாரங்களின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போதைய, கடந்தகால ஜனாதிபதி மற்றும் பிரதமர் 13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் என்றே கூறி வருகின்றனர். ஆட்சியாளர்களும் காலத்துக்கு காலம்13 க்கு அப்பால் என்றெல்லாம் கூறிவிட்டு எதனையும் செய்யவில்லை. தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதில் அவர்களுக்கு நாட்டமில்லை. சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் முன்வந்து தருவனவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டு வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

கிழக்கு மாகாண மக்களின் குறைகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஒரு தலைமைத்துவத்திடம். ஆனால் அத்தலைமைத்துவம் மக்களின் குறைகளை முன்வைத்து அதிகாரம் பெற்ற பின் மக்களை உதாசீனம் செய்பவர்களாக இருந்தால் மக்களின் கதி அதோ கதி என்றாகிவிடும். கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக செயல்படும் அதே நேரம் தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் களைய முன்வர வேண்டும். அவ்வாறு களையாவிட்டால் மத்திய பெரும்பான்மையான கட்சிகளின் கை ஓங்கிவிடும். ஏற்கனவே தமது மக்கட் தொகையை கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகிதத்திற்கு பெருக்கிக்கொண்டிருப்பவர்கள் எமது பரஸ்பர சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே எமது இருப்பை ஆட்டங்காண வைத்துவிடுவார்கள் என்பதை நாங்கள் உணர வேண்டும்.