மட்டு. மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளை அடையாளப்படுத்தி, அளவு நிர்ணயம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட வீதிகளை அடையாளப்படுத்தி அவ் வீதிகளுக்கான பெயர்களையும், வீதிரேகைகளின் அளவுகளையும் நிர்ணயம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது இன்று (15) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரில் பல வீதிகள் பெயர் சூட்டப்படாமல் காணப்படுவதுடன், அவ் வீதிகளின் அளவுகள் தொடர்பிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்படிக் கலந்துரையாடலானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் மாநகருக்குள் காணப்படும் வீதிகளின் விபரங்களை சேகரித்து, திருத்தங்களை ஆராய்ந்து அவற்றை வர்த்தமாணியில் பிரசுரிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதென்றும், வீதி ரேகைகளின் அளவுகளை அந்தந்த வீதிகளுக்கு ஏற்ற வகையிலும், அவ்வீதிகளுக்கு உரித்தான நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளுக்கு ஏற்ப தீர்மானித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேற்படிக் கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் முகமட் பைசல், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர் மயில்வாகனம், மாநகர பொறியியலாளர் திருமதி.சி.லிங்கேஸ்வரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.நாசர், மட்டக்களப்பு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவற்றின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.