கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தமே என்னை தடை செய்ய காரணம்.

பொதுஜன பெரமுன மட்டு. மாவட்ட வேட்பாளர் சே.ஜெயானந்தமூர்த்தி. 

( பாண்டிருப்பு )

கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் மக்களின் நலனில் அக்கறையற்றும், பாராமுகமாகவும் இருந்ததனாலேயே மக்களின் அடிப்படை நிலைமைகள் மேலும் மோசமடைந்திருக்கின்றது.
உண்மையில் கிழக்கு மாகாண மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை என, கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான சே.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

மட்டு களுவாஞ்சிக்குடி சூறையடி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் 2004 ஆம் ஆண்டு போட்டியிட்டு 48,000 க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அக்காலத்தில் நிலவிய இக்கட்டான நிலை காரணமாக, என் மீது பல தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பிலுள்ள எனது வீட்டில் இரண்டு ஆர்.பி.ஜி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலில் தப்பியதன் காரணமாக எனது சகோதரர் ஓட்டமாவடியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு பல்வேறுபட்ட தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்தான் எமது மக்களுக்காக சேவையாற்றினேன். இருந்தும், 2009 ஆம் அண்டு ஜெனீவாவுக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தேன்.

அப்போது இறுதிக்கட்டப் போர் இங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இறுதிப்போர் தொடர்பாக ஜெனீவாவிலும் லண்டனிலும் அங்குள்ள தமிழ்மக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலத்துகொண்டு எமது மக்களின் பிரச்சினைகளை உலக நாட்டுக்கு அறியப்படுத்தியிருந்தேன். ஆகவே இவ்வாறான ஒரு நிலையில் வெளிநாடுகளில் மக்களுக்காக குரல் கொடுத்தது மாத்திரமல்லாது, கூட்டமைப்பின் உந்துதல் மற்றும் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தினால் இலங்கைக்கு வர முடியாமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினர் என்னை தடை செய்தார்கள். இங்குள்ள சிலர் நான் நாட்டை விட்டு ஓடினேன் என பரப்புரை செய்கிறார்கள். ஆனால் நான் ஆறு வருடம் பாராளுமன்றத்தில் இருந்து சேவை செய்திருக்கின்றேன். அதனால்தான் தற்போதும் எனக்கு பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கின்றது.

ஆகவே நான் நாட்டை விட்டு ஓடியதாக பொய்யுரை கதைகளை கூறி எனது அரசியல் நடவடிக்கைகளை முடக்க எத்தனிக்கின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்ற நிலையிலும், கூட்டமைப்பு என்னை ஒதுக்கியதாலுமே ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

நானும் மறைந்த மாமனிதர் சிவராமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு பங்களிப்பை செய்திருந்தோம். பல கல்விமான்களுடன் உரையாடி, சந்திப்புகள் நடாத்தி கூட்டமைப்பை உருவாக்கியிருந்தோம். இப்பொழுது இருக்கின்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கூட்டமைப்பு எவ்வாறு உருவாகியது என்ற வரலாறு தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.

மக்கள் மனதில் எழுச்சி ஏற்பட்டுள்ளதுடன், மாற்றத்தினை நோக்கி சிந்திக்கின்றார்கள். கடந்த எழுபது வருட காலமாக தமிழ்கட்சிகள் மக்களுடைய தலையில் மிளகாய் அரைத்ததை மறந்துவிட முடியாது. மக்களை தொடர்ச்சியாக
தமிழ்த்தேசியம் என்ற வார்த்தை ஜாலத்தால் உணர்ச்சியூட்டி உசுப்பேற்றிய நிலை, எதிர்வரும் தேர்தலில் பலனளிக்காது. வார்த்தை ஜாலத்தால் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையை மக்கள் இன்று உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே நிச்சயமாக நாங்கள் எந்தக் கட்சியையும் உடைக்கப்போவதுமில்லை.

எங்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை தாங்கிக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாத எதிர்கட்சிகள் அரசியல் பீதி காரணமாக பொய் பரப்புரைகளை பரப்பி வருகின்றார்கள். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையே மக்கள் விரும்புகின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெறும்போது அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் நாங்கள் அரசாங்கத்துடன் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கலந்துரையாடி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இயன்றவரை முன்னெடுப்போம். தமிழ்மக்களின் வாக்குகளால் பொதுஜன பெரமுன மட்டக்களப்பில் அமோக வாக்குகளை பெற்று வெற்றியீட்டும்போது அரசாங்கமும் உணர்ந்து புரிந்துகொள்வார்கள் தானே என்றார்.