கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக மீண்டும் நிசாம்.

 (கதிரவன், வேதாந்தி)

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம் டி ஏ நிசாம் அவர்கள் செயல்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இதுவரை செயற்பட்ட மன்சூர் அவர்கள் மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை தடை இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது

2018 ஆம் ஆண்டு 10 மாதம் முதலாம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. எம்.மன்சூர் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் மூன்றாம் திகதி அவர் கடமையை பொறுப்பேற்றார்.

 இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக எம். எல். ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆளுநராக கடமை பொறுப்பேற்றதையடுத்து 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம். டி. எம். நிஷாம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் தன்னுடைய நியமனத்தை ரத்து செய்து புதிதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம். டி. எம். நிஸாம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் 2019 இரண்டாம் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் அவரது சட்டத்தரணி ஊடாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் நடைபெற்றது.

இந்நிலையில் இவ்வழக்கு தீர்ப்பிற்காக 01.06.2019 எடுத்துக் கொள்ளப்பட்ட போது கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல் ஏ. ஹிஸ்புல்லா தன்னிச்சையாகவும் சட்டத்திற்கு முரணாகவும், இயற்கை நீதி கோட்பாட்டிற்கு முரணாகத் செயற்பட்டதாக இதன்போது நீதிபதி திரந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டியதோடு தொடர்ந்தும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக நிரந்தரமாக எம். ஐ. எம். மன்சூர் தொடர்ந்தும் கடமை ஆற்ற முடியும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை ஆட்சேபித்து எம்.ரி.ஏ. நிசாம் அவர்கள் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மாற்றப்பட வேண்டும் என்றும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது எனத்தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சமர்ப்பித்திருந்தார். இதனை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவை வழங்கி எம் டி ஏ நிசாம்  அவர்கள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு அனுமதியை வழங்கி உள்ளது. நேற்றைய 2020.07.14 மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக இன்று15 2020 புதன்கிழமை காலை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் எம்.ரி.ஏ.நிசாம் அவர்கள் தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.