மண்முனை பாலத்தின் மின்குமிழ் எப்போது ஒளிரும்.

0
190

(படுவான் பாலகன்) அதிக பயணிகள் பயணம் செய்யும் மண்முனை பாலத்தின் வீதியில் மின்குமிழ் ஒளிராமையினால், இவ்வீதியினால் செல்லும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பாலம் அமைக்கப்பட்டு 2014ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட போதிலும், இப்பாலத்தில் உள்ள மின்குமிழ்கள் சிறிதுகாலம் ஒளிர்ந்த நிலையில், பின்னர் ஒளிராது விட்டதன் காரணமாக, மக்கள் இதுதொடர்பில் பல தடவைகள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஒளிர்ந்தது. தற்போது கடந்த சில காலங்களாக குறித்த பாலத்தில் உள்ள மின்குமிழ்கள் ஒளிராது இப்பகுதி இருள்சூழ்ந்த பகுதியாக காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியில் செல்லும் பயணிகள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது.

அண்மையில்கூட பல்வேறு விபத்துசம்பங்கள் இப்பாலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதி இருசூழ்ந்து இருப்பதனை சாதகமாக கொண்டு இரவு நேரங்களில் கால்நடைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்லும் செயற்பாடு நடைபெறுகின்றது. குறிப்பாக அண்மையில் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டுசெல்வதற்காக மாடுகளை வேகமாக மேய்ந்து கொண்டு வருகையில், முன்னால் வருகைதந்த மோட்டார் சைக்கிளில் குறித்த மாடு மோதுண்டு விபத்து சம்பவித்திருந்தது.

இவ்விபத்தில் மாடு ஒன்று இறந்தமையுடன், மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஏனவே குறித்த வீதிக்கான மின்குமிழை ஒளிரச்செய்வதன் ஊடாக இவ்வீதியில் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.