கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன. (ப.திகாம்பரம்)

(க.கிஷாந்தன்)80 ஆண்டுகளாக பொய்யுரைத்து மலையக மக்களை ஏமாற்றியவர்கள் இன்றும் அதனையே செய்கின்றனர். ஆனால், நாம் பொய்யுரைக்கவில்லை. நான்கரை வருடங்களில் மக்களுக்கு சேவையாற்றி விட்டு வந்து அவற்றை முன்வைத்தே வாக்கு கேட்கின்றோம். என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தமஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் 12.07.2020 அன்று மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது….

கடந்த ஆட்சியின்போது நாம் மலையக மக்களுக்கு பல சேவைகள் செய்தோம். ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர் எமது அமைச்சும் பறிபோய்விட்டது. அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன.புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் திட்டங்களை முன்னெடுக்க நிதியும் ஒதுக்கவில்லை கவனமும் செலுத்தவில்லை. எமது ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்நேரம் வேலைத்திட்டங்கள் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கும்.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்மை என்னவென்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் திகாம்பரம் நிர்மாணித்துக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடு, நான்கரை வருடங்கள் மக்களை ஏமாற்றினர் என சிலர் பிரச்சாரம் முன்னெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

எது எப்படியோ எமக்கான ஆதரவை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.புதிய அரசாங்கம் பதவிக்குவந்த நாள் முதல் இனவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றது. 5000 ரூபா கொடுப்பனவுகூட கட்சிசார்பாகவே வழங்கப்பட்டது. பொருட்கள், சேவைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணி வெற்றிபெறும். நாம் அமைச்சராவதும் நிச்சயம். அபிவிருத்தி திட்டங்களும் தொடரும்.

அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று விமல் வீரவன்ஸ குறிப்பிடுகின்றார். தேவையில்லை என்றால் எதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்? எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் உதிரி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் மக்கள் எமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கமுடியும். ‘ – என்றார்.