இனப்பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வேண்டுமென்று இலங்கையரசு முயற்சித்தவை கூட தமிழரசுக்கட்சியின் அழுத்தத்தினால் சாதித்தவையே.

0
130

கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் இரா. சாணக்கியன்.                                                                              பாண்டிருப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகள் கொடுத்த அழுத்தத்தினால் தமிழினம் சமனான இனம் என்பதை பொதுவெளியில் குரலெழுப்பி வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது, தமிழரசுக்கட்சி இருந்திராவிட்டால் அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ்மக்கள் எவ்வாறு இருக்கின்றார்களோ அதே போல வடகிழக்கிலும் தமிழர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும், கூட்டமைப்பின் மட்டு வேட்பாளருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி செயலக பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் நேற்று மாலை (08) புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சமஷ்டி முறையான அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளோம். அரசியலுரிமை தீர்வை பெறுவதற்கு அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணப்பாடு.

1949, 1950 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களை முன்னாள் அரசியல் தலைமைகள் தடுத்திராவிடில் கிழக்கு கூட சிங்கள மாகாணமாகத்தான் இருந்திருக்கும். தமிழ் மக்களின் அரசியலுரிமை இனப்பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் முயற்சித்தவை கூட தமிழரசுக்கட்சியின் அழுத்தத்தினால் சாதித்தவையே.

ஆயுதம் ஏந்திய முப்படைகளுடன் இருந்த மிகப்பெரும் பலம் இப்போது
தமிழரசுக்கட்சியிடம்
இல்லை. இன்று அரசியல் ரீதியான பலம் மாத்திரமே இருக்கின்றது. வடகிழக்கு தமிழ்மக்களின் எதிர்காலம் தமிழரசுக்கட்சியிலேதான் தங்கியிருக்கின்றது.

அரசியலமைப்பின் ஊடாகத்தான் அதிகார உரிமைகளை பெற முடியும். எதிர்வரும் காலங்களில் அரசியல் யாப்பின் ஊடாக தமிழ்மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தவறமாட்டோம். 13 ஆவது திருத்த சட்டத்திலுள்ளதை நடைமுறைப்படுத்தவே நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். விடுதலைப் போராட்டம் என்பது உலகத்திலுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போராட்டமாகும்.
ஒரு நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை இனத்துக்கெதிராக வன்முறையில் ஈடுபடுவது, சிறுபான்மையினரை வித்தியாசமாக நடத்துவது போன்றவை எல்லாம் எதிர்வரும் காலங்களில் மாறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது.

தமிழர்களின் ஒற்றுமையினை சிதற வைப்பதற்காக பலர் திட்டங்களை தீட்டியுள்ள நிலையில், தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை தமிழ்தேசிய உரிமை என்பதை இத்தேர்தலின் போது வெளிப்படுத்த வேண்டும். வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது, தமிழர்களுக்கு தெரியும். எவர் இல்லையென்று மறுத்தாலும் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஒரு காலப்பகுதியில் தங்களுடைய உயிரை விடுதலைக்காக அர்ப்பணித்தார்கள். ஆனால் இன்று தமிழ்மக்கள் வாக்குச் சீட்டினை பிரயோகித்து கூட்டமைப்பிற்காக அர்ப்பணிக்க வேண்டியதொரு அவசியம் எழுந்துள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளின் கரங்களை தமிழ்மக்கள் பலப்படுத்த வேண்டும் என்றார்.