கூட்டமைப்பை விட எந்தவொரு கட்சியும் தூய போக்கில் இல்லை.

0
130

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டு. மாவட்ட வேட்பாளர் ஸ்ரீநேசன்

இறைமை என்பது ஜனநாயக ரீதியாக மக்களின் உரிமைகளை காவுகொள்ளக்கூடிய வகையில் இறைமை இருக்குமாக இருந்தால் அந்நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லுகின்றதென்பதுதான் உண்மையான விடயம் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டு வேட்பாளருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வாகரை கிராமத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இவ்வியம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இறைமை என்பது மனித உரிமைகளை பறிக்காது ஜனநாயக அடிப்படைகளை பாதுகாப்பதாக இருப்பதுதான் ஜனநாயக ஆட்சியாளரின் இறைமையாக இருக்க முடியும். கடும் இறுக்கமான போக்கு என்பது சர்வதேச ரீதியில் தண்டனைக்குரிய நிலைமையை கொண்டுசெல்லும். எனவே காலம் தாமதமானாலும் கூட தமிழ்மக்களுக்குரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அரசின் கடும்போக்கான நிலைப்பாடுகள் சில வேளைகளில் தமிழ்மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

1949 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை சோரம் போகாத கட்சியாக இருந்து வருகிறது. சில வேளைகளில் ராஜதந்திர ஒத்துழைப்புகளை அரசாங்கத்திற்கு வழங்கி சில விடயங்களை பெறுவதற்கு முயற்சித்தாலும் கூட ஒட்டுமொத்தமாக விலை போகின்ற சரணாகதி அடைகின்ற போக்குகள் இருப்பதில்லை. இருந்தாலும் சில விதிவிலக்குகள் கூட்டமைப்புக்குள் நுழைந்துகொண்டு தம்மைத்தாமே விற்று சந்தைப்பொருளாக மாறி பணத்தை பெற்றுக்கொள்கின்ற நிலையும் இருக்கின்றன.
கூட்டமைப்பை விட எந்தவொரு கட்சியும் தூய போக்கில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கூட்டமைப்பு பதவிக்காக பணத்திற்காக சோரம் போகின்ற கட்சியாக இல்லை. தமிழ் மக்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் என்பதை அன்று தொட்டு இன்றுவரை அடையாளப்படுத்துகின்ற ஒரு கட்சியாக இருந்திருக்கின்றது. தமிழ்மக்களின் பிரச்சினைகளை கூட சர்வதேச மயப்படுத்துவதிலும் தங்களுடைய பங்களிப்பினை செய்திருக்கின்றது. தமீழிழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் இருப்பை , சர்வதேசமயப்படுத்தலில் கூடுதலான பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றது.

பேரினமக்களை அடிப்படையாக கொண்டுள்ள மொட்டுக்கட்சியிலுள்ள ஆட்சியாளர்கள் பதவியேற்றதன் பின்பு தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கின்ற விடயம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்து கலாசார ,கிறிஸ்தவ, இஸ்லாமிய விவகார அமைச்சுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தைப்பொங்கல் பண்டிகை தேசிய விழாவாக கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது, தொல்லியல் இடங்களை தேடுவதாக கிழக்கின் காணிகளை கபளீகரம் செய்ய முற்படுகின்றனர். ஆகவே இவ்வாறு எல்லாம் பார்க்கின்றபோது மொட்டுக் கட்சி என்பது ஒரு இனத்திற்கு சொந்தமான கட்சி போன்று செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதில் சில சுயநலமி அரசியல்வாதிகள் சரணாகதி அரசியல் செய்கின்றனர். மொட்டு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக குறைவான வாக்குகளைப்பெற்று கட்டுப்பணத்தையும் இழக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது யார் ? போராட்டத்தை இந்த நிலைக்கு கொண்டு சென்றது யார் ? கடத்தியவர்கள், மனிதவுரிமை மீறப்படுவதற்கு அரச படைகளோடு பக்க துணையாக செயற்பட்டவர்கள் யார் ? இப்படி எல்லாம் தமிழ்மக்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள், காணாமலாக்கியவர்கள், தமிழ் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்கள், தமிழ் கைதிகள் சிறையில் வாடுவதற்கு காரணமானவர்கள் ,ஆயிரக்கணக்கான ஏக்கர் கபளீகரம் செய்யப்படுவதற்கு உடந்தையாக அதற்கு உதவியவர்கள், எமக்கு எதிரானவர்களுக்கு உள்ளக இரகசியங்களை பரிமாற்றம் செய்து துரோகம் இழைத்தவர்கள் எல்லோரும் தம்மையும் தமிழ் மக்களின் நலன்விரும்பிகளாக காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு மட்டக்களப்பில் மாத்திரமல்ல வடகிழக்கில் கணிசமான ஆசனங்களை பெற்றுக்கொள்ளும். தமிழ்மக்களின் சுயாதீன கெளரவ இருப்பை கூட்டமைப்பு மாத்திரமே பாதுகாக்கும் கட்சியாக இருக்கின்றது. ஏனைய கட்சிகள் அரச படைகளோடும் அரச புலனாய்வுத் துறைகளோடும் அரசாங்கத்தோடும் இணைந்து செயற்படுகின்ற போக்குகளை பலரும் காணக்கூடியதாகவிருக்கும். கடந்த கால போருக்கு பங்கத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ்மக்களுக்கு எப்பொழுதும் விடுதலையை பெற்றுத்தரமாட்டார்கள். அவர்கள் எமது மக்களுக்கு இயன்றவரை எதிரான போக்கையும் துரோகமான போக்கினையும் கடைப்பிடித்திருக்கின்றார்கள். கடந்த காலத்தில் கட்சி மாறிய க.தங்கேஸ்வரி, பொடியப்பு பியசேன, முன்னாள் அமைச்சர் இராசதுரை ஆகியோர் கட்சி மாறி தோற்கடிக்கப்பட்டதுதான் வரலாறு. இப்போது கூட இளைஞர்களை பிழையான பாதைக்கு அழைத்துச் செல்பவர் நிச்சயமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் அந்நியப்படுத்தப்பட்டு செய்த துரோகத்துக்குரிய தண்டனைகளை பெறுவார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்பது எனது கணிப்பாகும் என்றார்.