13வது திருத்தம் முழுமையான ஒன்று அல்ல கி.துரைராஜசிங்கம்

0
157

( பாண்டிருப்பு) 

13வது திருத்தம் முழுமையான ஒன்று அல்ல என எமது தலைவர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள். 13ம் திருத்தம் முன்வைக்கப்பட்ட அன்றைய காலகட்டத்திலேயே அதற்கான 18 திருத்தங்கள் அல்லது உட்சேர்க்கைகளை எமது தலைவர்கள் முன்மொழிந்திருந்தார்கள். எனவேதான் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றோம் என, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் மட்டு வேட்பாளருமான இ தெரிவித்தார்.

மட்டு செங்கலடி செயலக பிரிவுகளில்  மேற்கொண்ட பிரசாரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களதும், வீரயுக தலைவர்களதும் உழைப்பின் காரணமாகத்தான் மங்கள முனசிங்க அறிக்கை, திஸ்ஸ விதாரணவினை உள்ளடக்கியதான நிபுனர்குழு அறிக்கை, நீலன் பீரிஸ் பொதி மற்றும் கடந்த கால ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட முழுமைபெறாத அரசியலமைப்பு என்பன இடம்பெற்றன.

தமிழரசுக் கட்சி 2010 ற்கு முந்திய கூட்டமைப்பு என்பவற்றில் இருந்தெல்லாம் அவ்வப்போது சிலர் விலகிச் சென்றார்கள். ஆனால் கட்சி புதியவர்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்தும் செயற்படுகின்றது. பிரிந்து சென்றவர்கள் காலஓட்டத்தில் கரைந்து போனார்கள். 2015ற்கு முன்பும் சிலர் பிரிந்து சென்றார்கள். அவர்களுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கவில்லை. தற்போதும் வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு பெயர்களுடன் சிலர் தாங்கள் அரசியற் கட்சிகள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுடைய செயற்பாடுகள் தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் என்பதை எமது மக்கள் நன்றாக உணர்வார்கள். எனவே, பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தனிநபர்களினுடைய விலகல்கள் அல்லது விலக்கல்கள் இருந்தபோதிலும் கூட்டமைப்பாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை மக்கள் நிச்சயமாக அங்கீகரிப்பார்கள். அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் பிரதான இலக்கான அரசியற்தீர்வு விடயத்தின் முக்கிய அம்சமான அரசியலமைப்புச் சட்டம் என்பதனைக் கையாளக்கூடிய ஒரே ஒரு அமைப்பு கூட்டமைப்பே அல்லாமல், அபிவிருத்திக் கோசம், விமர்சன மூலதனம், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான அர்ச்சனை என்பவற்றை மட்டும் மூலதனமாகக் கொண்டவர்களை, நிறைந்த அரசியல் அறிவு கொண்ட எமது மக்கள் எவ்வாறு அங்கீகரிப்பார்கள் என்றார்.