தமிழ்மக்களை பாதுகாக்கும் அரணாக கருணா!  பொத்துவில் கன்னிக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி சங்கர் காட்டம்.

(காரைதீவு நிருபர் சகா)பலவழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ்மக்களைப் பாதுகாக்கும் முதுகெலும்புள்ள துணிவுள்ள பாரிய அரணாக கருணா விளங்குவார் என்பதில் ஜயமில்லை.


அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கருணாஅம்மானுடன் நேற்றுமுன்தினம் இணைந்த குணசேகரம் சங்கர் நேற்று பொத்துவிலில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட தலைமைவேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதனின் பொத்துவில் தேர்தல் அலுவலகத்திறப்பு விழா நேற்று வேட்பாளர் எஸ்.ரமணன் தலைமையில் நடைபெற்றது.

வழமைக்கு மாறாக பெருந்தொகையான பொதுமக்கள் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தனர். 10வேட்பாளர்களும் சமுகமளித்திருந்தனர்.

அங்கு சங்கர் முன்னாள் எம்.பி மேலும் உரையாற்றுகையில்:

தமிழன் தன்மானவுள்ளவன்.விதியற்ற தமிழன் கதியற்றுப்போனான் என்றநிலையை மாற்றியமைத்து புதுவிதி செய்ய கருணாஅம்மான் அம்பாறை வந்துள்ளார். அவரது வருகை அம்பாறையில் பாரிய புரட்சியை மாற்றத்தை உண்டுபண்ணிவருகிறது என்பது மட்டும் உண்மையாகும். எதிரணியினர் வியந்து செய்வதறியாது திணறுகின்றனர்.

தமிழ்மக்கள் தன்மானத்தை இழக்காது அரசியல்தீர்வுடன் அபிவிருத்திப்பாதையில் பயணிப்பதே எமது இலட்சியமாகும். தீர்வு தீhவு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம். ஒவ்வொரு 5வருடங்களுக்கும் வந்துபோகும் வேட்டிகளை இன்னும் நம்பினால் நாம் நடுக்கடலில் தத்தளிக்கவேண்டிவரும்.

அம்பாறை மாவட்டத்தில் இரவுவேளையில் உயரத்திலிருந்துபார்த்தால் எங்கெல்லாம் இருட்டாக இருக்கிறதோ அவையெல்லாம் தமிழ்ப்பிரதேசங்கள் என்று அடித்துக்கூறலாம். இதுதான் த.தே.கூட்டமைப்பு இதுவரைகாலமும் செய்தசேவை.

தமிழமக்களை விற்றுப்பிழைக்கும் கூட்டம் அது. மக்களை குட்டிச்சுவராக்கிவிட்டு தாங்கள் மட்டும் ராஜபோகம் அனுபவிக்கின்றனர்
எந்தவொரு எம்.பி. வியாபாரம் செய்கிறானோ அவன் மக்களுக்கு சேவை செய்யமாட்டான். ஏனெனில் அவனுக்கு வியாபார கணக்குவழக்கு லாபநட்டம் பார்க்கவே நேரம் போதுமானது.

கடைசியாகவந்த எம்.பி. கோடீஸ்வரனும் அந்தபாணியில்தான். இங்கு செங்காமம் கிழங்குச்சேனை பொட்டுக்கல் கனகர்கிராமம் போன்ற பறிபோன கிராமங்களுக்கெல்லாம் நானும் கூடவே அவருடன் சென்றிருக்கிறேன். போன இடமெல்லாம் அதை மீட்டுத்தருவேன் என்று சொன்னாரே தவிர இதுவரை ஒரு அங்குலத்தையும் மீட்கவில்லை.ஆனால் அவர் கோடிகோடியாக சம்பாதித்து மீட்டுள்ளார்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு  ஒற்றுமையாக இல்லாமல் சின்னாபின்னமாக சிதறுண்டு மக்கள் ஆதரவற்று இருப்பதற்குக் காரணம் கோடீஸ்வரன்தான். சகவேட்பாளர் ஒருவருடனும் தொடர்பு இல்லை. தமிழ்மக்களை அடமானமாகவைத்து அரசுக்கு முட்டுக்கொடுத்ததற்காக அரசாங்கம் லஞ்சமாக வழங்கிய  கம்பெரலியைவைத்தவிர செய்தது ஒன்றுமேயில்லை. இந்தலட்சணத்தில் எந்தமுகத்தோடு மீண்டும் வோட்டுக்கேட்டுவருகிறார். மக்கள் மணற்சேனையிலும் கோளாவிலிலும் விரட்டியடித்தாக கூறப்படுகிறது.

கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் மாவையும் கொடுத்து கடந்தமுறை செய்ததுபோன்று வாக்கெடுக்கலாம் என்று கனவுகாண்கிறார். இம்முறை அந்தப்பாச்சா பலிக்காது. மக்களை ஒருதடவைதான் எமாற்றலாம். இனி ஏமாறப்போவது அவரே.

எனவே இனியாவது நாம் சிந்தித்து எமது இருப்பை பாதுகாக்க தானைத்தளபதியாக கடவுள் கொண்டிறக்கிய கருணா அம்மானை ஆதரிக்க கப்பல் சின்னத்திற்கு வாக்களிப்போம். என்றார்.