ஆயுதக்குழுக்கள் விக்னேஸ்வரன் பரப்புரை செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

0
185

ஆயுதக் குழுக்களுக்கும் அரசாங்க கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பரப்புரை செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.  இது உண்மையிலேயே மிக மன வருத்தமான விடயம். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆயுத போராட்டத்தை ஆதரித்தவர்களே உள்ளனர். ஆதரிக்கவில்லை என்று எவரையும் சொல்ல முடியாது. அவரது அவரது அணியில்  முன்னாள் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இருப்பதை மறந்து விட்டு அவர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (6) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் வேலாயுதம் கணேஸ்வரன் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்  தொடர்ந்து பேசுகையில்
அவரது கட்சியில் முன்னாள்  ஆயுதக் குழுக்களை சேர்ந்தவர்கள் அவரது அணியில் நான்கு பேர் இருக்கிறார்கள். அனந்தி சசிதரன் கூட நேரடியாக போராட்டத்தில் ஈடுபடாவிடினும் , அவரது கணவரின் பெயரை பாவித்தே அரசியல் செய்து வருகிறார். கணவர் குறித்து பேசாவிடில் அவருக்கு என அரசியல் செய்ய காரணங்களே இல்லை. சுரேஸ் பிரேமசந்திரன் ஆயுதம் ஏந்திய ஒருவர். ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் ஆயுதக் குழுக்களோடு இருந்தவர்கள்தான் ஒன்றிணைந்துள்ளனர்.
விக்ணேஸ்வரனது பேச்சை பார்க்கும் போது அவர்களது கூட்டணிக்குள் முரண்பாடு தொடங்கியிருப்பதாக உணர முடிகிறது. 4 முன்னாள் போராளி குழுக்களை தன்னோடு வைத்துக் கொண்டு விக்ணேஸ்வரன் இப்படி ஏன் சொல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.
திம்பு பேச்சு வார்த்தையின் ஊடாகத்தான் இந்த மாகாண சபை எமக்கு கிடைத்தது. அதற்கு இந்த ஆயுதக் குழுக்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அதுவும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை. இப்படி இருக்கும் போது இவர் எப்படி இப்படியான கருத்தை கூற முடியும்?
சுமந்திரன் , தான் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த போராளிகள் அனைவரும் சேர்ந்து இந்த மாகாண சபையை நடத்தி முன்னேற்றியிருக்க வேண்டும். ஆனால் இப்படி பேசும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து 5 வருடங்கள் மாகாண சபையில் இருந்து எதையுமே சாதிக்கவில்லை. இவர்களுக்கான கதிரைகள் போராளிகளால் பெற்றுக் கொடுக்கபட்ட ஒன்று என்பதை மறந்து போனார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக நுழைந்து அனைத்தையும் கவிழ்த்து கொட்டியதுதான் மீதமானது.
முதலமைச்சருக்கு நான் ஒரு சவாலை விடுகிறேன் , கடந்த மாகாண சபை செயல்பட்ட 5 வருட காலத்தில் இவர் செய்தது என்ன என பகிரங்கமாக சொல்ல வேண்டும்? ஆளுனர் சந்திரசிறி அவர்கள் இருக்கும் போதுதான் இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்று எமது கல்வி தரம் 6வது இடத்தில் இருந்தது. இவர் வந்த பின் கல்வி நிலை , கடைசி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அப்படியானால் இவர் இதுவரை சாதித்தது என்ன? பகல் 12 மணிக்கு நித்திரைக்கு போய் மாலை 4 மணிக்கு எழுந்ததை விட இவர் வேறென்ன சாதித்துள்ளார்? இதைத் தவிர எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அதோடு இப்படியெல்லாம் முன்னாள் போராளிகள் குறித்து பேச இவருக்கு எந்த அருகதையும் இல்லை. மக்கள் இவரை நிராகரிக்க வேண்டும் .
எனக்கு சிறையில் உள்ள அரசியல் கைதிகளோடு அதிக தொடர்பு உண்டு. அவர்களுக்காக நான் பல விடயங்களை செய்து வருகிறேன். தொடர்பிலிருக்கிறேன். அவர்கள் என்னிடம் பேசும் போது நீதிமன்றத்தில் தங்களது விசாரணை நடக்கும் போது ஒரு சிங்கள நீதிபதி வர வேண்டும் , விக்ணேஸ்வரன் மட்டும் எமது வழக்கை விசாரிக்க வரக் கூடாது என கடவுளை வேண்டுவதாக சொல்வார்கள். இவர் வந்தால் அதிக தண்டனைகளை கொடுப்பதாக பயப்படுவார்கள். இவை தடுப்பில் உள்ள அரசியல் கைதிகள் என்னிடம் நேரடியாகவே சொன்னவையாகும்.
நாங்கள் எத்தனையோ மக்களை இழந்திருக்கிறோம். போராளிகளையும் இழந்திருக்கிறோம். என் சொந்த உறவுகளையும் இந்த போராட்டத்தில் இழந்திருக்கிறேன். அதன் வலி எனக்கு தெரியும். இந்த போராட்டத்தை கொச்சப்படுத்துவதென்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கொச்சப்படுத்துவதாகும். விக்ணேஸ்வரனுக்கும் எம் மக்களுக்கும் பெரிதான தொடர்பு இல்லை. கொழும்பிலிருந்து வந்து எம் மக்களை அவர் கொச்சப்படுத்துவதை கடைசிவரை ஏற்க முடியாது. எனது சவால்களுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரதான வேட்பாளரும் அமைப்பாளருமான வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.