கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை ஆரம்பம்.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒன்றாக செயற்படும் மாகாணமாகும். இங்கு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி ஒத்துழைப்பாக இருந்து வருகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண ஆளுனர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலையில் பௌத்த சமயத்தினை மாத்திரம் கற்பிக்காது வேறு மொழிகளான பாலி மொழி, சமஸ்கிரதம், தமிழ், ஆங்கிலம் கற்பிக்கப்படுவதுடன், குறிப்பாக தமிழ் மொழி கற்பிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒன்றாக செயற்படுவதுடன், சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவது இன நல்லுறவை பேணும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 23 படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயரதன, அகில இலங்கை புத்ததாசன சபை தவிசாளர் ஜகத் சுமத்திபால, பௌத்த மதகுருமார்கள், இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த கால யுத்தத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் கீழ் நடாத்தப்பட்டு வந்த சிங்கள பாடசாலை யுத்த காலத்தில் தேசமாக்கப்பட்ட நிலையில் தற்போது சில தனவந்தர்களின் உதவி மூலம்; ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜகம்பத்தினால் திறந்து வைக்கப்பட்டதுடன், மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், புதிய மாணவர்கள் அனுமதிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இங்கு 15 பௌத்த துறவிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் சாதாரண தர பரீட்சை வரை ஐந்து வருட பாலி மொழி, சமஸ்கிரதம், தமிழ், ஆங்கிலம் என்ப கற்பிக்கப்படும். அத்தோடு புணாணை, புன்னக்குடா, வலைவாடி பகுதியில் இருந்து 17 பேர் பௌத்த மத கல்வி கற்பதற்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு உதவிய வழங்கிய தனவந்தர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஒரு தனவந்தரால் பாடசாலைக்கு பேருந்து ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.