திருக்கோணமலையில் பெண்களினது அரசியல் வழிகாட்டியாக செயற்படவுள்ளேன் சுலோசனா ஜெயபாலன்

ஓய்வடைந்தவர்கள் வீட்டில் இருப்பதைவிட்டு அரசியலில் நுழைகின்றார்கள், கல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வுகாலத்தில் தஞ்சமைடையும் இடமாக அரசியல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எமது மக்களிடையே இருந்து வருகின்ற நிலையில் எனது முடிவு சரிதானா என்ற ஐயமும் என்னிடம் இப்பொழுதும் இருக்கின்றது. இருந்தும் பெண்களினது அரசியல் வழிகாட்டியாக திருக்கோணமலையில் முயன்றுதான் பார்ப்போமே என்ற சவாலுடன் இந்தத் தேர்தல் களத்தில் நுழைந்திருக்கின்றேன். தொடரந்து நான் இருப்பதா இல்லையா என்பது உங்கள் கைகளில் தங்கியுள்ளது என தமிழரசுக்கட்சியின் திருமலை மாவட்ட பெண்வேட்பாளர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அறிமுக விழா செவ்வாய்க்கிழமைதிருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அவர் ஆற்றிய உரை முழுமையாக

எமது மக்களின் விடிவிற்காகவும் எமது மண் மீட்பிக்கிற்காகவும் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கி எமது உறவுகளை மனதில் நிறுத்தி தமிழ் அன்னைக்கு முதல் வணக்கத்தினைக் கூறி எனது கன்னி அரசியல் உரையினைத் தொடங்குகிறேன்.
சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் என்னால் முடிந்தளவு திறமையாக அதிபராக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்று இருந்த நிலையில் என்னை இந்தத் தேர்தலில் போட்டியிடுமாறு எமது கட்சியின் தலைமையில் இருந்து வந்த கோரிக்கையினை நான் முதலில் நிராகரித்திருந்தேன்.
தொடர்ச்சியான வேண்டுகோளினை அடுத்து வயது போனநிலையிலும் உறுதியான மனதுடன் திடமாக எமது மக்களுக்காகவும் மாவட்டத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துச் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பந்தன் ஐயாவினை எண்ணிப் பாரத்தேன்.
அவரது செயற்பாடுகளுக்கும் எமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் என்னால் முடியுமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று எண்ணினேன். எனது கருத்தினை மாற்றிக்;;கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்தேன்.
ஓய்வடைந்தவர்கள் வீட்டில் இருப்பதைவிட்டு அரசியலில் நுழைகின்றார்கள், கல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வுகாலத்தில் தஞ்சமைடையும் இடமாக அரசியல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எமது மக்களிடையே இருந்து வருகின்ற நிலையில் எனது முடிவு சரிதானா என்ற ஐயமும் என்னிடம் இப்பொழுதும் இருக்கின்றது. இருந்தும் பெண்களினது அரசியல் வழிகாட்டியாக திருக்கோணமலையில் முயன்றுதான் பார்ப்போமே என்ற சவாலுடன் இந்தத் தேர்தல் களத்தில் நுழைந்திருக்pன்றேன். தொடரந்து நான் இருப்பதா இல்லையா என்பது உங்கள் கைகளில் தங்கியுள்ளது.
இளம் வயதுடைய பெண்கள் இன்று அரசியலில் நுழைவதற்கு பின்னிற்கின்றனர். இதற்குப் பலவேறு காரணங்கள் இருக்கின்றன. கடந்த கால்களிலே தேர்தலிலே போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடரந்தும் கட்சியுடன் சேர்ந்து பயணிக்கின்றார்களா என ஆராய்ந்தேன். இல்லை என்பதே பதிலாக எனக்குக் கிடைத்தது. எப்படி அவர்களால் தொடரந்து பயணிக்க முடியும்? குறைந்தளவான வாக்குகளையே எமது மக்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்;. அவ்வாறு வாக்குப் பெற்றவர்களால் தொடரந்து செயற்பட அவர்களது மனச்சாட்சியே இடம் தராது. மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் எவ்வாறு அரசியலில் நீடிக்க முடியும்.? நாங்கள் வெல்வது என்பதற்கப்பால் உங்களது வாக்குகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெண்கள்கூட பெண்களுக்கு வாக்களிப்பதற்கு பின் நிற்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். உள்ளுராட்சி மன்றங்களிலே புதிதாக ஏஉருவாக்கப்பட்ட சட்டத்தினடிப்படையில்தான்; ஓரளவு பெண்கள் உறுப்பினர்களாகும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.
ஏன் பெண்களால் அரசியல் செயற்பாடுகளை செய்ய முடியாது என நினைக்கின்றீர்களா? அல்லது பெண்களால் செயற்படவே முடியாதென நினைக்கின்றீர்களா?
போராட்டங்களில் ஈடுபடுவதும் கூட்டங்கில் கலந்து கொண்ட வீர வசனங்கள் பேசுவதும் தான் அரசியல் அல்ல.
பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலே நான், திரு செல்வின், திரு.வரதராஜப்பெருமாள், திரு.குண்சி போன்றவர்கள் ஒன்றாகவே படித்தோம். அவ்வேளையிலே எமது போராட்டத்தின் ஆரம்ப காலங்கள் பல்கலைக் கழகங்களிலே மையம் கொண்ட நேரம். அப்போது நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டோம். ஆனைத்துச் செயற்பாடுகளிலும் சேர்ந்து இயங்கினோம்.
அதன் பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலே சென்றோம். எனக்கும் சில சிக்கல்கள் ஏற்பட்டது. என்னால் முடிந்தளவு பங்களிப்பினை வெளிப்படையாக இல்லாது விட்டாலும் மறைமுக ஒத்துழைப்புகளை நான் செய்தே வந்திருக்கிறேன் என்பதனை என்னைத் தெரிநதவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பெண்களை அரசியலில் ஏற்றுக் கொள்ளும் மனநிலை வளர வேண்டும். வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான அரசியல் செயற்பாடுகளில் பெண்கள் துணிந்து இறங்குவார்கள். விகிதாசார அடிப்படையில் பெண்கள் 52 வீதம் என்பதனை அனைவரும் மனதில் இருத்த வேண்டும். இம்முறை அதனை நீங்கள் செயலில் காட்ட வேண்டும்.
திருக்கோணமலையானது அதன் அமைவிடம் காரணமாக கேந்திர முக்கியத்துவம் பெறுகின்றது. உலக நாடுகளின் பார்வை திருக்கோணமலையினை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. திருக்கோணமலை மீது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் சீனாவினதும் கண்கள் எப்போதும் எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் இருக்கின்றன.
இந்திய வல்லரசின் ஒத்துழைப்பின்றி எதுமே சிறிலங்காவில் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்தியா துரோகம் செய்தது என கூறிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இலங்கை அரசு எந்தவித தீர்வுகளையும் தந்துவிடப்பேவதில்லை. அவ்வாறு சிறுதுளி எண்ணமாவது இருந்திருந்தால் அண்மையில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்லியல் பாதுகாப்புச் செயலணியில் உள்ள பதினொரு பேரையும் சிங்களவர்களாக நியமித்திருப்பார்களா? நாடாளுமன்றம் மூலமாக எதனையும் செய்துவிட முடியாதென்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஆனால் தவறுகள் நடப்பதை தட்டிக் கேட்பதற்கும் எமது மக்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் படும் இன்னல்களையும் வெளிக் கொணரும் ஒரு தளமாகப் பாவிக்க முடியும்.
கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களின் விகிதாசாரத்தினை குறைக்கின்ற நோக்கிலே தொடர் செயற்பாடுகள் அரசினால் 1941 களிலே கல்லோயா கந்தளாய் அல்லை பிரதேசங்களிலே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. விவசாயக் குடியேற்றங்கள் மூலமாக தொடங்கப்பட்டன. தற்போது பலவேறு வடிவங்களிலே அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தம்பலகமம் பிரதேசத்திலே ஆடைத் தொழிற்சாலை, குச்சவெளிப் பிரதேசத்திலே உப்புத் தொழிற்சாலை என மறைமுக நில ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது.. இவற்றிற்கு எதிராக நாம் தொடர் போராட்டங்களை நடத்தியே ஆகவேண்டும். அதற்கு சிறப்பானவர்கள் பெண்களே. நாங்கள் முன்னிற்கத் தயாராக இருக்கிறோம்.. பெண்களை எம்மால் அணிதிரட்ட முடியும். அவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நிகழ்த்தப்பட்டேயாக வேண்டிய அழுத்தங்கள் எம்மீது நாம் விரும்பாமலேயே சுமத்தப்படுகின்றன. அதனை நாம் கண்டு அச்சப்படாது எமது மக்களது இருப்பிற்காக துணிந்து முன்செல்ல வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்.
திருக்கோணமலையில் தமிழ் மக்கள் ஓரணியில் எப்போதும் இருக்க வேண்டும். இம்முறை அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இரண்டு உறுப்பினர்களை நாடாளுமன்றம் செல்வதற்காக உழைக்க வேண்டும். திருக்கோணமலை மாவட்டத்திலே மொத்தமாக 288871 வாக்குகள் இருக்கின்றன. அதில் தமிழ் வாக்காளர்கள் 90818 பேர் இருக்கின்றனர். முஸ்லிம் வாக்காளர்கள் 120782 பேரும் சிங்கள வாக்காளர்கள் 77271 பேரும் உள்ளனர்.
சிங்கள, முஸ்லிம் வாக்குகள் பல கட்சிகளுக்குப் பிரிவடையும். எமது மக்கள் எமது கட்சிக்கு மாத்திரமே வாக்களிப்பார்களாயின் நாம் இரண்டு உறுப்பினர்களைப் பெற முடியும். இது நம்பிக்கை. ஒரு இடமேபெற முடியாத நிலையில் களநிலை உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் எனது கருத்து பைத்தியக்காரியின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படலூம். ஆனால் எமது மக்கள் நினைத்தால் அதனை செய்து காட்டுவார்கள். 1989 ஆம் ஆண்டிலே செய்து காட்டினார்கள். 2004 ஆம் ஆண்டிலே செய்து காட்டியுள்ளார்கள். எமது மாவட்டத்தின் நிலையினை உணர்ந்து அனைத்துத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன்.
எமது மாவட்டம் தமிழர்களிடையேயான போட்டிக் களம் அல்ல. அதற்கு உகந்த இடமும் அல்ல. திருக்கோணமலை மாவட்டமும் அம்பாறை மாவட்டமும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டீருக்கிற இடங்கள். இங்கு நாம் பிரிந்து நிற்பது ஆரோக்கியமானதல்ல. அனைவரும் ஓரணியில் பயணிப்போம் என பிற கட்சிகளில் இயங்குகின்ற நண்பர்களிடம் கோருகின்றேன்.
எமது கட்சியின் செயற்பாடுகளிலும் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்பதனை நான் மக்களிடம் சென்ற போது கிடைக்கப்பெற்ற விமர்சனங்கள் கூறிநிற்கின்றன. கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து அணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் அரவணைத்து அவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். குறிப்பாக கட்சியில் இளைஞர்களினதும் பெண்களினதும் செயற்பாடுகளிற்கு தகுந்த வழியேற்படுத்தப்பட வேண்டும். தேர்தலின் பின்னர் கட்சியில் அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு உங்கள் சார்பாக நான் உழைப்பேன் என உங்களுக்கு இவ்விடத்தில் உறுதியளிக்கின்றேன். அது முடியாத காரியம் அல்ல என எண்ணுகிறேன்.
நிறைவாக உங்களை நம்பி நாங்கள் நிற்கிறோம். எங்களில் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை வீண்போகாதவாறு எமது எதிர்காலச் செயற்பாடுகள் இருக்கும் என கூறிக்கொண்டு ஆகஸ்ட் ஐந்தாம் நாள் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று உங்களது பொன்னான வாக்குகளை முதலிலே இலங்கைத் தமிழரசுக் கட்சிpன் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வழங்குங்கள். அதன் பின்னர் உங்களுக்கு மூன்று விருப்பு வாக்குகள் இருக்கின்றன. அதில் ஒன்றினை எனது விருப்பு எண்ணான 6 இற்கும் வழங்கி எனது எதிர்கால அரசியல்; செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு கோரி நிகழ்ந்தவை கடந்தவைகளாகட்டும் காத்திருப்பவை நமக்கானதாகட்டும் எனக் கூறி அமர்கின்றேன்.
நன்றி
வணக்கம்.