கல்முனையில் வீடு வீடாக டெங்கு பரிசோதனை

இன்று(26) கல்முனை வடக்கு சுகாதாரப்பணிமனையினால் வடக்கு சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஷ்வரன் வழிகாட்டலில் கல்முனையில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை வடக்கு சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு பரிசோதனை, சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கல்முனை பிரதேசத்தில்  தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதினால் டெங்கு நுளம்பின் பெருக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனைக்கருத்தில் கொண்டு பிரதேச பொதுச்சுகாதராப்பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயலணிக்குழு இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய தினம் கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டதுடன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதோருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.