மட்டக்களப்பில் வெள்ள தடுப்புத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ள அனர்த்த பாதிப்பிலிருந்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் பொருட்டு வெளிநாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெள்ளப்பாதுகாப்புத் திட்டமொன்று அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அமுல் நடத்தப்படவுள்ளது.

முந்தனை ஆற்றினையும் மட்டக்களப்பு வாவிகள் சார்ந்த பகுதிகளையும் இணைத்து இந்த வெள்ளத்தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் மட்டக்களப்பு எருமைத்தீவு அடங்கலான மட்டக்களப்பு வாவி ஆழமாக்கும் திட்டமும் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அத்துடன் வெள்ள அனர்த்தங்களின் போது மிக மோசமாக பாதிக்கப்படும் கிரான் பாலத்தை புனரமைப்பு செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா இத்திட்டம் பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.

குறித்த கிரான் பாலம் வெள்ளத்தால் மூழுகின்ற போது அப்பிரதேசத்தை அண்டிய பலகிராமங்கள் தனிமைப்படுத்தப்படுவதனால் இத்திட்டத்தினால் குறித்த பால அபிவிருத்தியை சிபாரிசு செய்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் அமுலாக்கம் பற்றிய சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் அபிவிருத்தி குழுவின் பிரதிநிதி டேவிட் சாஜன், பேராசிரியர் எஸ். நந்த கோபாலன் அடங்லான குழுவினர் இன்று (25) அரசாங்க அதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்து சாத்தியவள

அறிக்கை தயாரிப்பது பற்றி விசேட கலந்துரையாடலை நடாத்தினர்.

இந்த சந்திப்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மத்திய நீர்;பாசன திணைக்களத்தின் பிரதம எந்திரி திருமதி ரஜனி ரவீந்திரன், திட்ட எந்திரி ஜி. தனஞ்ஜெயன், றூகம் பிரிவுக்கான எந்திரி எஸ். நிரோசன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அமிர்தலிங்கம், உட்பட என பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.

இந்த திட்டத்திற்கான சாத்தியவளை அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இத்திட்டம் பூர்த்தியானதும்  இம்மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்கள், கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற இக்கட்டான நிலைமையை தவிர்க்க வழி ஏற்படுவதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தகவலில் மேலும் தெரிவித்தார்