3மணி நேரத்துள் வந்தால் பாரிசவாதத்தை குணப்படுத்தமுடியும்

0
220
கல்முனை ஆதாரவைத்தியசாலை பொதுவைத்தியநிபுணர்  இதயகுமார்.
காரைதீவு  நிருபர் சகா

பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (Stroke)அறிகுறிகள் தென்பட்டதும் நோயாளியை மூன்று மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தால் அதனைக் பூரணமாகக் குணமாக்கமுடியும்.

இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் நாராயணசுவாமி இதயகுமார் தெரிவித்தார்.

புதிதாக கிழக்கு மாகாணத்தில் பாரிசவாத உடனடிச்சிகிச்சை கல்முனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பொறுப்புவைத்தியநிபுணர் என்ற அடிப்படையில் அவரிடம்கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
எமது வைத்தியசாலைக்கு சீற்ரி ஸ்கன் வசதி கிடைக்கப்பெற்றதால் நாம் இந்த பாரிசவாத உடனடிச்சிகிச்சையை ஆரம்பிக்கமுடிந்திருக்கிறது.
இன்று பொதுவாக பக்கவாத நோய்த்தாக்கத்தால் படுக்கைக்கு போகுமளவிற்கு அதன் விளைவுகள் காணப்படுகின்றன. இதற்கு அடிப்படைக்காரணம் அறியாமையே.
ஒருவருக்கு  முகம் கோணலாகிறது அல்லது கை இயலாமல் போகிறது அல்லது வாய் பேசமுடியாமல் ஒரு பக்கத்திற்கு இழுக்கிறது அல்லது கால் இயலாமல் போகிறது என்றால் மறுகணம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்;த்தால் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்தநேரத்துள் சீற்றி ஸ்கன் செய்து உரிய மருந்தை வழங்கினால் நிச்சயம் குணப்படுத்தலாம்.

அந்த 3மணிநேர தங்கநேரத்தை வீட்டிலோ அல்லது தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது பயணத்திலோ தாமதிக்க வைப்பதால் குணப்படுத்தும் வாய்ப்பை இழக்கநேரிடும்.

துரதிஸ்ட வசமாக நாம் மாரடைப்பிற்கு(Heart Attack) கொடுக்கும் முக்கியத்துவம் பாரிசவாதத்திற்குக் (Stroke)கொடுப்பதில்லை. இரண்டும் ஒப்பீட்டளவில் ஒன்றுதான்.
மாரடைப்பு என்பது இதயத்திற்கு குருதி கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவது. பாரிசவாதம் என்பது மூளைக்கு குருதி கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவது.

பொதுவாக மூளைக்கு குருதி கொண்டுசெல்லும் இருவகையான காரணிகளால் பக்கவாதம்ஏற்படுகிறது.
சுமார் 80-85 வீதமான பக்கவாதம் குருதிக்குழாயில் ஏற்படுகின்ற அடைப்பினால் வருவது. மீதி 10-15வீதமான பக்கவாதம் குருதிக்கசிவினால் ஏற்படுகின்றது.
இரண்டாவது கசிவினால் ஏற்படும் வாதத்தை நரம்பியல் நிபுணரின் துணையோடு குணப்படுத்தலாம்.
பக்கவாதம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உயர்குருதி அமுக்கம் நீரிழிவு கொலஸ்ரிறோல் புகை பிடித்தல் மதுஅருந்துதல் என்பன கட்டுப்பாட்டில் இல்லாததே பிரதான காரணம் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வயது போகப்போக
பக்கவாதம் வருவதிலிருந்து பாதுகாக்கவேண்டுமாகவிருந்தால் தினமும் 30நிமிடம் வேகநடையுடன்கூடிய உடற்பயிற்சி செய்தல் மற்றும் வீட்டில் வேலை செய்தல் . சமநிலை  உணவுப்பழக்கவழக்கத்தை சீராக மேற்கொள்ளல். தேவையற்ற மனஅழுத்தத்தை தவிர்த்தல் அதாவது வீட்டுப்பிரச்சினையை வேலைத்தலத்திற்கும் வேலைத்தலப் பிரச்சினையை வீட்டிற்கும் கொண்டுபோகாமல் தவிர்த்தாலே பெரும்பாலான அழுத்தங்கள் குறையும். அதற்காக தியானம் செய்தல் நல்லது.