ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர். இ.கதிருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம்,வீ. ஆனந்தசங்கரி பகிரங்க கடிதம்

யார் புலிகளை அழித்தார்களோ! அவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி நீங்களும் புனிதமான அரசியலை வியாபாரமாக செய்யும் சுயநல அரசியல் வாதியாக ஜனநாயக போராளிகள் கட்சி  மாறிவிட்டீர்கள். ஏன தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி பகிரங்க கடிதம்
மட்டுமாறன்
ஜனநாயக போராளிகள் கட்சி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையில் வளர்ந்தவர்கள் ;என்று தெரிந்து கொண்டேன். ஆனால் தற்பொழுது அதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. யார் புலிகளை அழித்தார்களோ! யார் புலிகளை அழிக்க உடந்தையாக இருந்தார்களோ! அவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். களத்தில் வீர மரணம் அடைந்த உங்கள் சக போராளிகளின் இறுதி நேர மூச்சுக்காற்றை சற்று எண்ணிப்பாருங்கள். ஏன தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம்,
வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர். இ.கதிருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம்,வீ. ஆனந்தசங்கரி பகிரங்க கடிதம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுப்பிவைத்துள்ளார்
கடந்த 16.06.2020ம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் தாங்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைவர் பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்த கருத்து உங்கள் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளா? என்ற சந்தேகம் எனக்கேற்பட்டுள்ளது. நாம் பல தடவைகள் கொழும்பு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளோம்.
அந்த நாட்களில் உங்கள் உள்ளத்திலுள்ள வேதனைகளை என்னிடம் கொட்டியுள்ளீர்கள். அதை ஒப்பிட்டு பார்க்கும் போது எது உண்மை? எது பொய்? என்று எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒன்று மட்டும் புரிகின்றது முன்னாள் போராளிகள் என்ற அந்த இடத்திலிருந்து சற்று தடம் புரண்டு புனிதமான அரசியலை வியாபாரமாக செய்யும் சுயநல அரசியல் வாதிகளின் கையில் சிக்கிக்கொண்ட இந்நாள் அரசியல் வாதியாக மாறிவிட்டீர்கள். எது எப்படியிருப்பினும் என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயன்படுத்தி 2004ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, என்னவெல்லாம் செய்தது என்பதை நாம் பல தடவைகள் நம் சந்திப்புகளில் உரையாடியுள்ளோம். இறுதிநேர யுத்தத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது, நம் அனைவருக்கும் தெரியும்.
யுத்தத்தை நிறுத்துவதற்கு கடுகளவு ஜனநாயக செயற்பாடுகளைக்கூட செய்யாமல் வெளிநாட்டிலும், இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும், யுத்தத்தை நிறுத்தும் படி கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். தமிழகத்தில் உள்ள எமது தொப்புள் கொடி உறவுகள் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
ஆனால் கூட்டமைப்பினர் அத்தனையையும் வேடிக்கை பார்த்து விட்டு, கிளிநொச்சி பிரதேசத்தை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றிய பின், இந்தியாவில் இருந்து வருகை தந்த முக்கிய தலைவர் ஒருவர் ‘மண்ணை இழந்தாலும் ஈழப்போராட்டம் தொடரும்’ என்று ஊடகங்களுக்கு அறிக்கையை வெளியிட்டு, மீண்டும் இந்தியா சென்று விட்டார். களத்தில் போராடிக் கொண்டிருந்த நீங்களும், உங்கள் சக போராளிகளும் இந்தியா ஏதோ ஒரு ஏற்பாட்டை செய்ய விரும்புகின்றது போலவும், அதனால் தான் அவர் இவ்வாறான ஒரு அறிக்கையை சமிக்ஞை மூலம் காட்டி சென்றுள்ளார் என்று நினைத்து,
உக்கிரமாக போராடி பலர் வீர மரணமடைய உங்களைப் போன்ற ஒரு சிலர் காயங்களுடன் உயிர் தப்பினீர்கள். அவர் கூறியது உங்களை உசுப்பேத்தி, ரணகளத்திற்கு கொண்டு சென்று ஒட்டு மொத்த புலிகளும் அழிய வேண்டும், என்ற நோக்கில் கூறப்பட்டதே தவிர, இந்தியாவின் சமிக்ஞை அல்ல, என்பது இறுதியில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். இது உங்களுக்கும் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்.
யுத்தம் முடிந்த பின் நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பிய முன்னாள் போராளிகள் அமைப்பை இராணுவத்தினரின் உளவாளிகள் என்று, இதே கூட்டமைப்பினர் தான் தட்டிக்கழித்தனர். என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஒரு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், உண்மையான போராளிகள் எல்லாம் இறுதி நேர யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டார்கள் என்றும் கூறினார். அப்படியானால் தற்போது உங்களை எந்த வகையில் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
கடந்த நல்லிணக்க அரசாங்கத்தில் வேறு ஒரு குற்றச் சாட்டின் பெயரில் கைதுசெய்யப்பட்ட, புனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஐந்து பேரை, சில நாட்களின் பின்னர் நீங்கள் தற்போது ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயற்சித்தார்கள், என்று சிறையில் அடைத்துள்ளார்கள். இப்போதாவது அவரை அணுகி, உண்மையாகவே உங்களை அவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா? அல்லது உங்கள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக நீங்கள் செய்த ஏற்பாடா? என்று கேட்டுப்பாருங்கள்,
இப்போதுதான் நீங்கள் அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறீர்களே! அந்த நன்றி உணர்ச்சிக்காகவாவது சில வேளை உங்களுக்கு உண்மையை சொல்லுவார். ஏனென்றால் நீங்கள் சொல்வது போல தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சியின் பிரதம பேச்சாளரே அவர்தான். அந்த ஐந்து முன்னாள்; போராளிகளையும் அவர்கள் குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். அவர்கள் அவ்வாறான கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்பது நான் நன்கு அறிவேன். ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போல விடுதலைப் புலிகளின் எந்த படையணியில் இருந்தார்கள் என்று நீங்கள் விசாரித்து தெரிந்து கொண்டு அவர்களின் விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
யுத்தம் முடிந்து கடந்த 10 வருட காலத்தில் நீங்கள் ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இரண்டு பாராளுமன்ற தேர்தலையும், ஒரு மாகாணசபை தேர்தலையும் சந்தித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்காக எதையாவது சாதித்துள்ளார்களா? புனர்வாழ்வு அழிக்கப்பட்ட 12,000 போராளிகளில் எத்தனையாயிரம் பேருக்கு நிரந்தர வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்துள்ளார்கள்? அரசியல் கைதிகள் எத்தனை பேரை விடுதலை செய்துள்ளார்கள்? ஆனால் எனக்குத்தெரிந்தளவில் வடக்குக் கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வசதியாக வாழ, காணிகள் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டியுள்ளார்கள். மக்களும் இதனை நன்கு அறிவார்கள். நீங்கள் அறியாதது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது.
என்னுடன் பழகும் பொழுது நீங்கள் அனைவரும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் தற்பொழுது அதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் யார் புலிகளை அழித்தார்களோ! யார் புலிகளை அழிக்க உடந்தையாக இருந்தார்களோ! அவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். களத்தில் வீர மரணம் அடைந்த உங்கள் சக போராளிகளின் இறுதி நேர மூச்சுக்காற்றை சற்று எண்ணிப்பாருங்கள்.
எங்களுக்கு தேர்தலில் அதரவு அளிக்க சொல்லி நான் கோர வில்லை, யாருக்கு ஆதரவு அளிக்கக்கூடாதோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க மக்களிடம் நீங்களே வேண்டுகோள் விடுக்கும் போது தமிழர்களின் சாபக்கேட்டை யாரிடம் முறையிடுவது? எம் மக்களுக்கு விமோசனம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். மக்கள் இவ்வாறான துரோகங்களுக்கு முகம்கொடுத்து வாழப் பழகிக் கொண்டார்கள். இனிமேல் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வாழ்த்துகின்றேன். ஏன அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது