கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும் என உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு ! கணக்காளரும் வரவில்லை! தரம் உயர்த்தலும் நடக்கவில்லை !

0
235
செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துமாறு கோரி கடந்தவருடம் ஜீன் 17ஆம் திகதி கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரத்ன தேரர் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினாரல் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் நிறைவடைந்து இன்று ஜீன் 23 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளபோதிலும் இங்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவும் இல்லை இது வரை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவும் இல்லை இது குறித்து கல்முனை வாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 31 வருடங்களாக சகல அதிகாரங்களும் கொண்ட பிரதேச செயலகமாக  உயர்த்தப்படாதுள்ளது. இப் பிரதேச செயலகத்தினை தரம் உர்த்துமாறு காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் கல்முனை வாழ் தமிழ் மக்களின் கோரிக்கை தட்டிக்கழிக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நிர்வாக விடயங்களை இலகுபடுத்துவதற்காக 10.04.1989 இல் தமிழ் உப பிரதேச செயலகமாக ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வரை உப பிரதேச செயலகமாக இயங்கிவருகின்றது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனது நிர்வாகப் பிரிவில் 9314 குடும்பங்களையும், 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 40126 சனத்தொகையையும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களையும் கொண்டுள்ளது. அதன் நிர்வாக அலகாக வடக்கே பெரியநீலாவணை தாமரைக்குளம் சந்தியையும், கிழக்கே கடலையும், மேற்கே நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப்பாலம் ஆகிய தமிழ் கிராமங்களையும் எல்லையாகக் கொண்டு இயங்கிவருகின்றது.
அப்போது இலங்கையில் இருந்த உப பிரதேச செயலகங்கள் 28 இல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் 27 ஆவதாக இடம் பிடித்திருந்தது. 1993.07.28 ஆம் ஆண்டு கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சகல அதிகாரம் கொண்ட உப பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால் சில  அரசியல்வாதிகளின் தலையீட்டால் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த அதிகாரம் கொண்ட பிரதேச செயலகம அன்று  கை நழுவிப்போயிருந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாது இழுத்தடிக்கப்பட்டுவருகின்றது. கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக செயற்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினாலும் இப் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்க முடியாது போய்விட்டது. கடந்தவருடம் இன்று ஜீன் 23 ஆம் திகதி பிரதேச செயலக முன்றலில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்ட்டது. கல்முனைக்கு வருகைதந்த அரசியல் பிரமுகர்களின் வாக்குறுதிகளை நம்பி உண்ணாவிரதிகள் தங்களது போராட்டத்தை நிறைவு செய்திருந்தனர்.
ஆனால் இன்றுவரை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இம் முறை தேர்தலிலும் இப் பிரதேச செயலக தரம் உயர்த்தல் விடயம் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.