இன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் தொடர்பிலான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் !

(காரைதீவு   சகா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மகோற்சவம் இம்முறை ஆகமவிதிப்படி யூலை மாதம் 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மகோற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

திணைக்களத்தலைவர்கள் மற்றும் ஆலய நிருவாகிகள் கலந்துகொள்ளும் இககூட்டத்தில் சமகால கொரோனா நெருக்கடி காரணமாக உற்சவத்தை எவ்வாறு நடாத்துவது என்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இம்முறை ஆடிவேல் உற்சவம் யூலை மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி யூலை மாதம் 20ஆம் திகதி நிறைவடையவிருக்கிறது. 18தினங்கள் அபிசேகபூஜைகள் இடம்பெறும். பிதிர்க்கடன் செலுத்தும் தீர்த்தோற்சவ பூஜை 20ஆம் திகதி நடைபெறும் என  ஆலயதலைவர் சு.சுரேஸ் தெரிவித்தாhர்.

யூலை மாதம் 01ஆம் திகதி வாஸ்துசாந்தியும் மறூநாள் யூலை 02ஆம் திகதி கும்பாபிசேக சங்காபிசேகமும் இடம்பெறும். தீர்த்தம் நிறைவுற்றதும் 21ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும் 22ஆம் திகதி வைபரவர் பூஜையும் இடம்பெறும்.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் ஆலயகுரு சிவஸ்ரீ.அங்குசநாதக்குருக்கள் ஆகியோருடன் கலந்துரையாடியபோது மேற்படி உற்சவதினங்கள்  கூறப்பட்டுள்ளன . எனினும் சமகால கொரோனா நெருக்கடியினால் பிரதேச செயலகத்தில் இன்று 22ஆம் திகதி எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைவாகவே சுகாதாரவிதிமுறைகளுக்கமைவாக ஆடிஅமாவாசை உற்சவம் இடம்பெறும் என ஆலயத்தலைவர் சு.சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

கிழக்கிலங்கையின் முதலாவது திருப்படைக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயமானது 15வருடங்களுக்குப்பிறகு கடந்த 25.06.2018 திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி  வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகமவித்தியாபூசணம்  விபுலமணி. சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில்  மகாகும்பாபிசேக குடமுழுக்குப்பெரும்சாந்தி பெருவிழா மிகவும் சிறப்பாக  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.