மட்டக்களப்பில் மொட்டுக் கட்சி, படகு கட்சிகளின் தலைவர் கோத்தபாய ராஜபக்ச – இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம்.

(மட்டு அலுவலகச்செய்தியாளர், மட்டுமாறன்
அரசாங்கத்தோடு  புதிய அரசியலமைப்புக்காக  தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம், பிராந்தியங்கள் தழுவிய, அபிவிருத்தி தொடர்பான  நடவடிக்கைகளுடன், அரசு தமிழ் மக்களைப் புறக்கணிக்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாக அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளுமாறு செய்வோம்என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) பொதுச் செயலாளரும் மட்டுமாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அவர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல், நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நடைபெறவுள்ள தேர்தலில் ஆதரவு தெரிவிக்கின்ற கட்சிகள், மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்ததாக நடைபெறற்ற ஊடக சந்திப்பிலேயே இக் கருத்தினை முன்வைத்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் இராசமாணிக்கம் சாணக்கியன், கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கம், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , ஞானமுத்து சிறிநேசன், நவரெத்தினராசா கமலதாஸன், மாணிக்கம் உதயகுமார், முருகேசப்பிள்ளை ஞானப்பிரகாசம், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண அமைச்சரும் வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் ,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அதாவது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆதரவு வழங்குகிறது. அதனுடைய உப தலைவர் நகுலேஸ், ஈரோஸ் ஜனநாயக முன்னணியும் ஆதரவு வழங்குகிறது. தங்களுடைய ஆதரவினையும் வெளிப்படுத்தமாறும், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா மன்றமும் தங்களுடைய ஆதரவினை வழங்குவதனையும் அறிவிக்கும்படி கூறியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதங்களுடைய  தமிழ் மக்களுக்கு நிறைவான அதிகாரத்தினை வழங்கக் கூடியதான  ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுதல், மக்களுடைய அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தலுக்கான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்ட முயற்சிகளில் ஈடுபடுத்துதல் ஆகிய  இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறது.அந்த அடிப்படையில் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தினை மக விரைவில் வெளியிடவிருக்கிறோம்.
      இலங்கையில் சுதந்திரம் அடைந்ததற்குப்பின்பு நடைபெற்ற நிகழ்வுகள் இந்த நாட்டை முழுமையாக தேசியமாக அடையாளம் காட்டவில்லை. ஒரு பெருந்தேசியவாதத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில், அதன் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியவாதம் ஒன்று உருவாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் நாங்கள் தமிழ்த் தேசியத்தை முன்நிறுத்தியவர்களாக இருக்கின்றோம்.
   அந்த வகையில் வடக்கு கிழக்கில் எங்களுடைய தமிழ்த் தேசியத்தினுடைய நில அடையாளத்துடன் கூடிய தமிழ்த் தேசியத்தையும். இலங்கையில் எல்லா இடங்களிலும் பரந்து வாழுகின்ற மலையக மக்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்களையும் சேர்த்ததாக தமிழ்த் தேசியம் அமைகின்றது.
நாங்கள், எங்களுக்கு பிரிக்கப்படாத பிளவுபடாத நாட்டுக்குள்ளே பிராந்தியத்துக்கு அதிகாரங்கள் வலியுறுத்தப்பட்ட திரும்பப்பெறாத அதிகாரங்களுடன் கொண்டதான ஒரு அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான பல்வேறு முன்நகர்த்தல்களை முன்னை ஆட்சிக்காலங்களில் எடுத்திருக்கின்றோம்.
    கடந்த ஆட்சிக் காலத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய வரைபு என்கிற வரைக்கும் நாங்கள் அதனைக் கொண்டு சென்றோம். கடந்த 2018ல் நடைபெற்ற ஒக்ரோபர் புரட்சி காரணமாக அது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. இருந்த பொழுதிலும் வருகின்ற பாராளுமன்றம் அமைப்பதனைத் தொடர்ந்து அது தொடர்பாக எங்களுடைய முற்சிகளைத் தொடர்வோம். இது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது இந்த புதிய அரசியலமைப்பு தொடர்பாக அக்கறை கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்.
அவர்களுடைய இந்த கருத்தை நாங்கள் வரவேற்றுக் கொண்டு வருகின்ற அரசாங்கத்தோடு எங்களுடைய அரசியலமைப்பு தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நகர்த்துவோம்.
பிராந்தியங்கள் தழுவிய, அபிவிருத்தி தொடர்பாக எங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். அரசு வழக்கம் போல இந்த நாட்டில் தமிழ் மக்களைப் புறக்கணிக்கின்றதாக அபிவிருத்தி நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாக இருந்தால் அது தொடர்பாக இருக்கின்ற காலங்களில் எல்லாம் அந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்ததிலிருந்து  அரசு தன்னை விலக்கிக் கொள்ளுமாறு செய்வாம்.
இதற்கு மேலதிகமாக எங்களுடைய புலம்பெயர் சகோதரங்களிடமிருந்து பெறுகின்ற வளங்களினை அடிப்படையாகக் கொண்டு எங்களுடைய பிராந்தியங்களில்  நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சிறிய அளவிலான தொழில்பேட்டைகளை விவசாயம், மீன்பிடி போன்ற சகல துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளக்கூடிய எங்களிடமுள்ள  திட்டங்கள் மேற்கொள்வதற்கும் , வேலைவாய்ப்புக்களை முறையான வகையில், திறமை அடிப்படையிலும், விகிதாசார அடிப்படையிலானவற்றினை விகிதாசார அடிப்படையிலும், பெற்றுக் கொள்வதில் நாங்கள் முனைப்புக் காட்டுவோம். அந்தவகையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதிலும் நாங்கள் முன்னின்று உழைப்போம்.
இன்றைய தேர்தல் களத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. வினோதம் என்னவென்றால், எங்களை விமர்சிக்கின்ற எல்லாக் கட்சிகளும் தங்களுடைய கொள்கை என்ன வென்று வெளிக் கொணரவில்லை. தங்களுடைய கொள்கைகளைச் சொல்லாமலேயே எங்களுடைய கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சிப்பதை மட்டுமே தங்களுடைய கொள்கையாகக் கொண்டிருக்கிற வினோதத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய மாவட்டத்திலும் சரி வட கிழக்கு மாகாணங்களிலும் சரி போட்டியிடுகின்ற அரசு சார்ந்த , வலியுறுத்திச் சொல்லுகின்றோம் தமிழ்த் தேசியகக் கூட்டமைப்பையும், தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளையும் தவிர்ந்த தேசிய கட்சிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்கின்றவர்கள். அல்லது தேசியக் கட்சிகளை தங்களுடைய பின்னணியாக வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள் எல்லோரும் பெருந்தேசியவாதத்துக்குத் துணை போகின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொருத்தவரை மொட்டாக இருந்தாலும் சரி வள்ளமாக இருந்தாலும் சரி இவர்களெல்லாம் தங்களுடைய தலைவர யார் என்பதனை வெளிப்படுத்த வேண்டும்.
அவர்களுடைய பிராந்தியத்தலைவர்கள் தலைவர்கள் அல்ல. உண்மையிலேயே அவர்களுடைய தலைவர்கள் பெருந்தேசியக் கட்சிகளின் தலைவர்கள். மொட்டுக் கட்சியாக மட்டக்களப்பில் கேட்பவர்களுடைய தலைவர் யார் என்று கேட்டால் அது கோத்தபாய ராஜபக்ச அவர்கள்தான். இந்த வகையில் பெருந்தேசியக் கட்சிகளில் இருக்கின்றவர்கள். அதே நேரத்தில் வள்ளத்தில் கேட்பவர்களின் தலைவர் யார் என்று கேட்டால் அவரும் கோத்தபாய ராஜபக்சதான்.
 பிராந்தியத்தலைவர்கள் அவர்களுடைய தலைவர்கள் அல்லர். ஆகவே அவர்களுடைய கொள்கை பெருந்தேசியக் கொள்கை.  மொட்டாக இருந்தாலும் வள்ளமாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கைகளைத்தான் நிலைநாட்ட வேண்டும். ஆனால் அவர்கள் முகமூடி போட்டுக் கொள்கின்றார்கள். அதனை மக்கள் மிகக் கவனமாக நுணுக்கமாக ஆராயவேண்டிய அவசியமில்லை. மிக வெளிப்படையாக அது தெரிகின்றது.
ஜனாதிபதியவர்கள் படிப்படியாக நிருவாகத்திலும் மற்றைய எல்லாவற்றிலும் இராணுவத்தினை ஈடுபடுத்துகின்ற செயற்பாடுகளில் இருக்கின்றார். மிக முக்கியமாக நாங்கள் குறிப்பிடுவதென்னவென்றால் தொல்லியல் திணைக்களம் தொடர்பில் அவர் கிழக்கு மாகாணத்தில் அமைத்திருக்கின்ற ஜனாபதிபதி செயலணி.
ஒரு வேற்று இன குடிமகனும், அதிகாரியும் இல்லாத ஒரு செயலணியாகத்தான் இந்தச் செயலணி இருக்கின்றது. ஞானசார தேர்ர் சொல்லுவதைச் சொல்வதென்றால், இந்த நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட ஏனைய இனங்களுக்கு உரிமையானதல்ல, குறிப்பாகத் தமிழர்களுக்கு உரிமையானதல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தினை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றோம்.
   வரலாறு தெரியாத விதத்திலே அல்லது வரலாற்றைப் பொய்யாக்குகின்ற விதத்தில் ஞர்னசார தேர்ர் சொல்லுகின்ற விடயம் கண்டனத்துக்குரிய வரலாற்று அடிப்படையில் நாங்கள் விஜயன் வருருவதற்கு முன்பே இருந்தவர்கள். உண்மையில் லெமுரியா கண்டத்தில் ஆதி தமிழன் வாழ்ந்தான் லெமுரியா கண்டம் பிழவுற்றபொழுது உருவாகிய ஒரு தீவுதான் இலங்கை லெமுரியா கண்டத்தில் ஈழம் என்ற ஒரு நாடு இருந்தது அந்த ஈழம்தான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை. அந்தவகையில் பார்க்கின்ற போது இலங்கையில் தமிழர்கள் லெமுரியா கண்டம் பிளவு பட்டபோது இருந்தோம்.
அண்மைய ஆராய்ச்சிகளின் படி எங்களுடைய கதிரவெளியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் புத்தர் பிறப்பதற்கு   500 ஆண்டுகளுக்கு முன்பே நாகர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாற்றைச் சொல்கிறது. நாகர்கள்தான் எங்களுடைய ஆதிகுடிகள். அந்த வகையில் நாங்கள் எந்த வகையிலும் இந்த நாட்டுக்கு அந்நியப்பட்டவர்கள் அல்ல. கி.மு 547ல் விஜயன் வந்து குவேனியைத் திருமணம் செய்து குவேனியைக் கலைத்துவிட்டதற்குப்பிறது. அவன் பாண்டிய இளவரசிகளை திருமணம் செய்ததன் காரணமாக வடமொழியும் தமிழும் கலந்து உருவாகியதுதான் சிங்கள மொழி.
ஆரிய பாடையை எனத் தொடங்கும் சோமசுந்தரப் புலவரது பாடல்  இது எங்களுடைய பாடப்புத்தகங்களில் இருந்தது. இதனை முற்றாக மறைத்து விட்டார்கள். ஆக வடமொழியும்,  தமிழ் மொழியும் சேர்ந்து உருவாகிய சிங்கள மொழி பேசுகின்ற சிங்கள மக்கள் இது தங்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்று சொல்வது மிகவும் அபத்தமானது ஆகவே இதனை நாங்கள் இதனை மறுதலிக்கிறோம். இந்தச் செலணியை கண்டிக்கின்றோம் என்றார்.