கருணா அம்மான் அரசியலில் மிகவும் கீழ்நிலைக்கு செல்வதை பார்த்து நான் ஏமாற்றமும் வெட்கமும் அடைகின்றேன்

கருணா  அம்மான் படையினரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளதை கடுமையாக சாடியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இது வெட்கக்கேடானது,மன்னிக்கமுடியாதது, நீதித்துறையினரால் கவனிக்கப்படவேண்டிய விடயம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கருணா அம்மானை ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயமையநீரோட்டத்தில் கலந்துகொள்ளுமாறு செய்தவன் என்ற அடிப்படையில் அவர் அரசியலில் மிகவும் கீழ்நிலைக்கு செல்வதை பார்த்து நான் ஏமாற்றமும் வெட்கமும் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னர் அவரின் நடவடிக்கைகளை கருத்தில்கொள்ளும்போதும், விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்படுவதில் அவரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போதும் அவர் பொறுப்புணர்வுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வேறுபாதையை தெரிவுசெய்தார்,அவர் தற்போது குறுகிய அரசியல் நலன்களிற்காகவும் பொதுமக்கள் மத்தியில் தன்னை வலுவானவராக காண்பிப்பதற்காக துணிச்சல் மிகுந்த ஆயுதப்படையினர் ஆயிரம் பேரை கொலை செய்தேன் என தெரிவிப்பது வெட்கக்கேடானது, மன்னிக்கமுடியாதது, நீதித்துறையினரால் கவனிக்கப்படவேண்டிய விடயம் எனவும் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலுடன் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டிய அரசியலிற்கான சிறந்த உதாரணமாக மக்கள் இதனை பார்ப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடடுள்ளார்.