மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை வழிப்பாதை

0
152

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை வழிப்பாதை ஒழுங்கினை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துமாறு மட்டக்களப்பு போக்குவரத்துப் போலிசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து மற்றும் கழிவகற்றல் தொடர்பான பிரச்சனைகள தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வைத்தியசாலை வீதிக்கான ஒற்றை வழிச் செயற்பாடு முறையாக செயற்படுத்தப்படாத நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட போது அங்கு  சமூகமாயிருந்த வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சில விடயங்கள் காரணமாக இந்த செயற்பாட்டை தொடர்ச்சியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இரு வாரங்களின் பின்னர் இந்த செயற்பாட்டை இறுக்கமான முறையில் செயற்படுத்த தமது பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி திணைக்களம் வைத்தியசாலை வீதியை அகலப்படுத்தி வாகன நிறுத்தங்களுக்கான இடங்களை அடையாளப்படுத்தும் வரை ஒற்றை வழிச் செயற்பாட்டை அனுசரித்து வாகனங்கள் நோயாளர்களையும் பொதுமக்களையும் வைத்தியசாலை வரை சென்று இறக்கி விட்டுச் செல்வதற்கும், அதேபோன்று எவராவது அழைக்கும் பட்சத்தில் வைத்தியசாலை வாயிலுக்குச் சென்று அவர்களை ஏற்றிச் செல்வதற்கும் அனுமதிப்பது எனவும், இவ்வீதியில் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற வாகனங்களிடமிருந்து எதுவித தரிப்புக் கட்டண அறவீட்டையும் மேற்கொள்வதில்லை எனவும், இது பற்றி  அதற்கான குத்தகைக்காரருக்கு எழுத்து மூலம் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இவ் வாகனங்கள் தரித்து நிற்பதானால் அவை வாவிக்கரை வீதி -01ல் தான் தரித்திருக்க வேண்டும் எனவும் இவ்விடயத்திலும் வீதிப் போக்குவரத்து பொலிசாரின் கண்காணிப்புடன் இதனை நடைமுறைப் படுத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டதுடன், புற்றுநோய் வைத்தியப் பிரிவிற்கு முன்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒரு முச்சக்கர வண்டி மாத்திரம் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற வகையில் அதற்கான தரிப்பிடத்தை அடையாளப்படுத்தி தரும் பட்சத்தில் வாவிக் கரை வீதி இல:1இல் தரித்திருக்கும் முச்சக்கர வண்டிகள் தமக்குள் ஓர் ஓழுங்கின் அடிப்படையில் அத் தரிப்பிடத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்து தரித்து நோயாளரை அல்லது பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டதுடன், வீதிப் போக்குவரத்து பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக இதனை சரியாக கணகாணிக்க வசதியாக குறித்த தரிப்பிடத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் இலக்கங்களை அவ்விடத்தில் காட்சிப்படுத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் கா.சித்திரவேல், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர் கே.மயில்வாகனம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி  ஆர்.எம்.எஸ்.ஜே.ராஜபக்ஷ,போதனா வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜே.குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.