சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அருகில் விபத்து ஒருவர் பலி

வி.சுகிர்தகுமார்
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அருகில் உள்ள வளைவில் நேற்றிரவு (18)இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஓருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய எம்.ஏ.எம்.லாபிர் என திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த மற்றுமொருவர்; மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்தில் இருந்து சம்மாந்துறையை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அருகில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரங்களில் நடப்பட்டிருக்கும் வீதி பாதுகாப்பு கட்டைகளையும் உடைத்துக்கொண்டு  அருகில் உள்ள சிறிய பள்ளத்தில் பாய்ந்து குடைசாய்ந்துள்ளது.

இவ்வாறு வீதியை விட்டு விலகி கார்; 5 இற்கும் மேற்பட்ட வீதி பாதுகாப்பு கட்டைகளையும் உடைத்துக்கொண்டே பாய்ந்து பலத்த சேதத்துக்குள்ளாகியதுடன் ஒரு புறத்தில் இருந்த பாதுகாப்பு கட்டை ஒன்று மறுபுறத்திற்கு தூக்கி வீசப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.