மட்டக்களப்பு மக்கள் மீது இன்று பற்றும் பாசமும்வந்து பலதரப்பட்ட கோஸங்களுடன் தேர்தலில் குதித்து உள்ளனர்.

டாக்டர் செல்லமாணிக்கம் நீதிராஜன்

 இன்று பலருக்கு மட்டக்களப்பு மக்களில் திடீர் பற்று,பாசம் வந்து மட்டக்களப்பு மக்களை அபிவிருத்தி செய்யவேண்டும், மக்களை மீட்கவேண்டும் ,மண்ணை மீட்கவேண்டும், வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும், பெண்களுக்கு உரிமை வேண்டும், சிறார்களின் கல்வி உயரவேண்டும் என்றெல்லாம் பலதரப்பட்ட கோஸங்களுடன் தேர்தலில் குதித்து உள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் பலரும் தேர்தலில் போட்டி இடுவது வரவேற்கதக்கவிடயம் இருந்தாலும் என்மனதில் இந்த கேள்விகளும் எழுகின்றது.

நான் யுத்தம் உக்கிரம் அடைந்து இருந்த காலத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில்/மட்டக்களப்பில் வேலை செய்து இருக்கின்றேன். அந்த காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து இருக்கின்றேன் . அப்போது மட்டக்களப்பு வைத்தியசாலை மட்டும் அல்ல மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் பிரச்சனைகளை, துயரங்களை எதிர்கொண்டனர். அந்த அனுபவத்தினூடாகவே இதை எழுதுகின்றேன்.

அன்று மட்டக்களப்பு மக்கள் பெரும் துயரையும் இன்னல்களையும் சந்தித்து கொண்டு இருந்த காலங்களில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வந்து வேலை செய்ய முன்வராது வெளிமாவட்டங்களில் ஒழிந்து இருந்தவர்கள், மட்டக்களப்பு மக்களுக்கு எந்தவகையிலும் உதவ முன்வராதவர்கள் எல்லோரும் தேர்தலில் குதித்து இருக்கின்றார்கள்.

சுனாமி வந்து இரு வாரம் அங்கு தொடர்ந்து நானும் எனது மனைவியும் அகதி முகாம்களில் இரவு பகலாக வேலைசெய்தோம். அப்போது வெளிநாடுகளில் இருந்தும் சில வைத்தியர்கள் வந்து வேலை செய்தார்கள், சில சிங்கள வைத்தியர்களும் வந்து வேலை செய்தார்கள். மட்டக்களப்பு பிரதி சுகாதார திணைக்களத்தால் நடத்தப்பட்ட நடமாடும் வைத்தியசேவையில் கடமை நேரத்தில் கடமைக்காக வந்து வேலை செய்த வைத்தியர்களை தவிர வேறு யாரும் அகதி முகாம்களுக்குள் வந்து உதவியதை நான் காணவில்லை.

வெளிமாவட்டங்களில் வேலை செய்த மட்டக்களப்பை சேர்ந்த எந்த வைத்தியரும் எந்த ஒரு அகதி முகாமிலும் வேலை செய்ததை நான் காணவில்லை.

   இதேபோல் மட்டக்களப்பு அரச அதிகாரிகள், மட்டக்களப்பின் முக்கியஸ்தர்கள் என்று இப்போது கூறிக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்திருப்பவர்கள் எவரும் வந்து அகதிமுகாமில் வேலைசெய்ததை நான் காணவில்லை.

மக்கள் பிரச்சனையில் இருக்கும் போது தாங்களும் தங்களுடைய விடயமும், தங்களது குடும்பமும் என்று வாழ்ந்தவர்கள், தங்களின் நலன்களை மட்டும் கவனித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள் இப்போது திடீரென மட்டக்களப்பு மக்களில் பாசம் வந்து அவர்களை அபிவிருத்தி செய்யவேண்டும்,அவர்களை மீட்கவேண்டும் என்று தேர்தலில் போட்டி இட வந்து இருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.

தேர்தலில் எல்லோரும் போட்டி இடலாம் அது ஜனநாயக உரிமை, இருந்தாலும் தாங்கள் பொருத்தமானவர்களா?, மக்கள் உண்மையான பிரச்சனையில், கஷ்டத்தில் இருக்கும்போது உதவாது கோழைத்தனமாக, சுயநலமாக, தங்கள் வேலையை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்துவிட்டு சந்தர்ப்பம் வந்ததும் பதவிக்கும் புகழுக்கும் வருமானத்துக்கும் அரசியலுக்கு வருவது கேலியான மானம்கெட்ட வேலை அல்லவா என்று இவர்களின் மனதில் வெட்க உணர்வு தோன்றவில்லையா?

சந்தர்ப்பவாதிகளாக செயற்படும் இவர்களை மக்கள் இனம் காணவேண்டும். ஒவ்வொருவர் பற்றியும் ஆழமாக ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டிய காலம். ஒருவருடைய பட்டமோ பதவியோ ஒருவருக்கு ஆளுமையை கொடுக்காது. அது ஒரு தவறான புரிதல் ,ஆளுமை சம்பந்தமாக தவறான புரிதலையும் பலர் உண்டுபண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

  பிரச்சினை இருக்கும் போது ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தவர்கள், தங்களின் நலன்களை மட்டும் கவனித்துக்கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வந்தாலும் எதிர்காலத்திலும் பிரச்சனைக்கு முகம்கொடுக்காமல் சந்தர்ப்பவாதிகளாக ஒரு நழுவும் போக்கையே கடைபிடிப்பார்கள். இதை பொதுமக்கள் உணரவேண்டும்.

சமூகத்தில் பிரச்சனை இருக்கும் போது சுயநலமாக தந்திரமாக கோழைகளாக ஒதுங்கி இருந்துவிட்டு சந்தர்ப்பம் வரும்போது பதவிகளுக்கும் தலைமைத்துவத்துக்கும் புகழுக்கும் மட்டக்களப்புக்கு ஓடி வரும், வீட்டை விட்டு வெளியே வரும் நிலைமை யுத்தத்தின் பின்னான காலத்தில் உருவாக்கி இருக்கிறது.

அதுமட்டுமல்ல எதிர்கால சந்ததியினரும் சமூகத்தில் பிரச்சனை இருக்கும் போது சுயநலமாக தந்திரமாக கோழைகளாக ஒதுங்கி இருந்துவிட்டு சந்தர்ப்பம் வரும்போது பதவிகளுக்கும் தலைமைத்துவத்துக்கும் வரும் நிலைமை தொடர இந்த தேர்தல் வழிவகுக்கக்கூடாது. கோழைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் முன்னிலைப்படுத்தும் செயலை ஊக்குவித்தால் சமூகத்துக்கு பின்னடைவே ஏற்படும்.

தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கக்கூடியவர்கள், இந்த விடயம்களில் ஆளுமை உள்ளவர்கள், கடந்த காலம்களில் முகம் கொடுத்தவர்கள் யார் என்பதை முழுமையாக ஒரு ஆய்வுக்குள் விடுவதன் மூலம் வரும் விடையினூடாகவே உங்களது தேர்வு இருக்கவேண்டும்.

இந்த படத்தில் இருக்கும் பூனையை போல்தான் தேர்தலில் போட்டி இடுபவர்கள் தங்களை பெரும் புலிகளாக கற்பனை செய்துகொண்டு தேர்தலில் குதித்து இருக்கின்றனர். தங்களின் உண்மையான பலத்தை ஆளுமையை ஒரு ஆய்வு செய்ய இவர்கள் தவறி விட்டனர்.

இது மாற்றத்தை கொண்டு வருவதை விட தடுமாற்றத்தையே கொண்டுவரும் என்றே நினைக்கின்றேன்.

இந்த தேர்தல் பலருக்கு பல பாடம்களை கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்