மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்து கல்முனையை துண்டாட முயற்சி எடுக்கப்படுகின்றது

அம்பாறை மாவட்டத்தை இன்று, என்றுமில்லாதவாறு ஒருசில இனவாதிகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்து கல்முனையை துண்டாட முயற்சி எடுக்கப்படுகின்றது. இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டுமானால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையானது மக்களின் அதிக செல்வாக்கை பெற்ற மு.கா.வுடன் சங்கமிக்கும் போதுதான் எமது பிரதிநிதித்துவத்தையும் அதிகரித்து இனவாதிகளையும் துரத்தியடிக்க முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சியின் தேசிய பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான்  தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

எமது கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மு.கா.வின் கல்முனைத் தொகுதி முன்னாள் எம்.பி ஹரீஸ் மற்றும் மாவட்டத்தின் ஏனைய இரு எம்.பி.க்களும் கல்முனையின் பாதுகாப்பு விடயத்தில் எடுத்துக் கொண்ட துணிகரமான செயற்பாடுகள் யாவரும் அறிந்ததே. அந்த துணிச்சல் இதர கட்சிகளில் களமிறங்கியுள்ள புதிய வேட்பாளர்கள் எவரிடமும் கிஞ்சித்தும் இல்லை. இருப்பதற்கு வாய்ப்புமில்லை. இன்றுள்ள சூழ்நிலையில் எமக்கு தேவைப்படுவது சமூக பார்வையை முன்னிலைப்படுத்தும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமே. அவ்வாறானோரே இன்று மு.கா.வின் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்  என குறிப்பிட்டுள்ளார்.