இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் -பொதுமக்கள் அதிகாரிகள் முறுகல்

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் அவற்றை அகற்ற சென்ற அதிகாரிகள் பொதுமக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

புதன்கிழமை(27) மதியம்   அம்பாறை மாவட்டம்  கல்முனை சுமத்ராராம விகாரை சூழல் மற்றும் அதனை அண்டிய மக்கள் குடியிருப்பு மக்கள்  இஸ்லாமபாத் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும்   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தலைமையில் சுகாதார சுத்திகரிப்பு  பொறுப்பதிகாரி சுத்திகரிப்பு மேற்பார்வையாளர் ஊழியர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கழிவு நீர் வழிந்தோடும் வடிகால்களை துப்பரவு செய்து அதனை அகத்துறிஞ்சி பவுசர் மூலமாக வேறோரு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பமாகியது.

இந்நிலையில் கல்முனை  சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன அவ்விடத்திற்கு வந்து மாநகர முதல்வருடன் இப்பிரச்சினை தொடர்பாக உரையாட முற்பட்டார்.இதன் போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தற்காலிக தீர்வு வேண்டாம் என கோரி தத்தமது நியாயங்களை எடுத்து கூறினர்.

இதன் போது நிலமைகளை ஆராய்ந்த பின்னர் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் இவ்வீட்டுத்திட்டத்தின் மலக்கழிவு விடயம் தொடர்பாகவும் அது சார்ந்த பல விளக்கங்களை தன்னிலை விளக்கமாக அவ்விடத்தில் உள்ளோருக்கு வழங்கியதுடன்  தன்னால் இம்மலக்கழிவு  பிரச்சினைக்கு தற்காலிகமாக  தீர்வினை பெற்று தர முடியும் என கூறி அக்கழிவுகளை அவ்விடத்தில் இருந்து அகற்றி மக்களிற்கு உதவுமாறு அதிகாரிகள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வாறு மலக்  கழிவு நீர்  மாநகர சபையினரால் தற்காலிகமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை மாநகர சபை முதல்வருக்கு அவ்விடத்தில் இருந்த  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை பகுதி இணைப்பாளர் சுதா நன்றிகளை தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பாக விரைவில் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு நிரந்திர தீர்வு ஒன்றினை பெற உதவுமாறு கேட்டார்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொதுச்சுகாதார பரிசோதகரிடம் மாநகர முதல்வர் இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு ஒன்றை காண்பதற்கு ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள ஆவண செய்ய முடியுமா என கேட்டார்.

அதற்கு மிக விரைவில் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்வதாக குறித்த சுகாதார பரிசோதகர் வாக்குறுதி வழங்கினார்.

தொடர்ந்து சிறிய சலசலப்பு அப்பகுதியில் இடம்பெற்ற போதிலும் மாநகர சபையின் சுகாதார பிரிவு சுத்திகரிப்பு பிரிவினர் குறித்த மலக்கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (26) குறித்த மலக்கழிவு நீர் வெளிறே;றப்படுவதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன்  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின்  மற்றும் சுகாதார பரிசோதகர் குழுவினரை அப்பகுதிக்கு மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய  வருகை தந்த  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  ஆராய்ந்ததுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மேற்சொன்ன அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு   தெரியப்படுத்தி இருந்தார்.

மேலும் நேற்று  கல்முனை மாநகர சபை முதல்வரின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சுகாதார சுத்திகரிப்பு  பொறுப்பதிகாரி சுத்திகரிப்பு மேற்பார்வையாளர் வருகை தந்து இத்துர்நாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு  ஆறுதல் கூறிய ஊழியர்கள் இன்று(27) மதியம்  குறித்த கழிவினை முறையாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேற்குறித்த பிரச்சினையானது சுமார் 10 வருடங்களுக்கு மேலாக  காணப்படுவதுடன் குறித்த வீட்டுத்திட்டத்தை  அண்டியுள்ள நீரோடும்  கால்வாயினுள் சட்டவிரோதமாக மலக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.