கலைஞர்கள் சமூகத்தின் மனோநிலை மாற்றத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)    

கலைஞர்கள் தமது கலைத்துறைக்கு அப்பால் சமூகத்தின் மனோநிலை மாற்றத்திற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக உதவி அவசியமான கலைஞர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுக்கான காசோலைகளை கலைஞர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (22.05.2020) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

கலைஞர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமானவர்களாவர். ஏனெனில் இவர்கள் அடுத்தவர்களில் ரசனைக்கும் மகிழ்சிக்கும் ஏன் ஒரு சமூகத்தின் இருப்புக்கும் Nவையான படைப்புக்களை வெளியில் கொண்டுவருபவர்கள். அவ்வப்போது ஏற்படும் அனர்த்தங்கள் பற்றி நாம் மக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வுகளை அறிவூட்டல்களை செய்தாலும் மக்கள் அவற்றை மறந்து செயற்படுகிறார்கள். கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பேணுங்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் மக்கள் கேட்டும் கேட்காதது போல் நடந்து கொள்கிறார்கள் இது எமக்கு வேதனையை தருகின்றது.

வீதிகளால் செல்லும் போது கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிநின்று பொருட்கள் கொள்வனவு செய்வதை சர்வ சாதரணமாக காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் வந்து சொன்னால் செய்கிறார்கள் பின்னர் ‘பழைய குறுடி கதவை திறடி’ என்பது போலே மக்கள் செயற்படுவதாக பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியது உண்மை. எமது சமூகத்தின் மனோநிலை மாற்றமடைய வேண்டும்.

கலைஞர்களிடமிருந்து அரசாங்கம் அதிகளவில் எதிர்பார்க்கிறது. சமூகத்த மனோ நிலையை மாற்றுவதற்கு கலைஞர்கள் முடியுமான அளவு காத்திரமான பங்களிப்புக்களை செய்ய வேண்டும். கலைஞர்களுடைய ஆற்றல்களையும்;, தேவைகளையும் வளப்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்குகின்ற ஒரு சிறிய கொடுப்பனவே இதுவாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கணக்காளர் வை.கபீபுல்லா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கிபானா ஜிப்ரி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கிவைத்தனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழிமூல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 74 கலைஞர்களுக்கு 10000.00 ரூபா வீதம் 7 இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபா (740000.00) நிதி பகிர்ந்தளிக்கப்பட்டன.